சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கைச் சுருக்கம்
முன்னுரை :
✓ சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
✓ இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார்.
✓ பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், ‘சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது’ எனப் புரிய வைத்தார்.
✓ இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள்.
✓ இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார்.
✓ இப்பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்று அழைக்கின்றனர்.
✓ திருப்பாட்டினைச் ‘சுந்தரர் தேவாரம்’ என்றும் அழைப்பர்.
✓ திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.
∆ பெயர் : சுந்தரமூர்த்தி நாயனார்
∆ குலம் : ஆதி சைவர்
∆ பூசை நாள் : ஆடிச் சுவாதி
∆ அவதாரத் தலம் : திருநாவலூர்
∆ முக்தித் தலம்: திருவஞ்சைக்களம்
∆ தத்துவம் : சைவ சமயம் பக்தி நெறி.
✓ இவர் வாழ்ந்தது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.
✓ இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
✓ இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
✓ இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார்.
✓ அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
சுந்தரர் தேவாரம் :
✓ சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் ‘சுந்தரர் தேவாரம்’ என்று அழைக்கின்றனர்.
✓ இப்பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் அழைப்பது வழக்கம்.
✓ இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
✓ இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர்.
✓ இவை பண்களோடு அமைந்துள்ளன.
✓ அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர்.
✓ இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன.
✓ அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.
✓ தேவாரங்களில், ‘செந்துருத்திப் பண்’ கொண்டு பாடல் பாடியவர் இவரே.
✓ தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
✓ சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு.
✓ இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
சுந்தரர் வரலாறு :
✓ சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் – இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
✓ இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்.
✓ இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.
✓ நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர்.
✓ இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
✓ சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார்.
✓ சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
தடுத்தாட்கொள்ளல் :
✓ மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
✓ மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார்.
✓ திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார்.
✓ இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி”.. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.
✓ பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.
✓ இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது.
✓ இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
✓ “நீள நினைந்தடியேன்”.. என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
திருமணங்கள் :
✓ திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார்.
✓ அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர்.
✓ சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
✓ சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, ‘ஞாயிறு’ என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான ‘சங்கிலியார்’ எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார்.
✓ சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.
சிவபெருமான் செயல் :
✓ அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.
✓ இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.
✓ சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.
✓ திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார்.
✓ சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
✓ திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முக்தி :
✓ சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார்.
✓ சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார்.
✓ அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
அற்புதங்கள் :
✓ செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
✓ சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
✓ காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
✓ அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
✓ வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
குருபூஜை :
✓ சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.
முடிவுரை :
✓ அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக திகழ்பவர் சுந்தரர்.
✓ அவரின் வாழ்க்கை எப்படி தொடங்கியது , திருமணம் ஏன் தடைப்பட்டது , சிவனின் திருவிளையாடல்கள் என பலவற்றை பற்றி இப்பகுதியில் கண்டோம்.
எழுதுவது : திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு,
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பண்டுதகாரன் புதூர் , மண்மங்கலம்,
கரூர் – 6.