ஐ.நா மன்றத்தில் மியான்மாரின் இடத்தைக் கைப்பற்ற முயன்றுவரும் இராணுவ ஆட்சி.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான மியான்மாரின் பிரதிநிதியாகத் தமது சார்பான ஒருவரை மன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்க வைக்க முயன்று வருகிறது மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நாட்டின் இராணுவம். இரண்டாவது தடவையாக எடுக்கப்பட்ட அந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

பெப்ரவரி 2021 முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். சர்வதேசமும் மியான்மாரின் இராணுவத்தினர் ஜனநாயகத் தேர்தல் மூலம் நாட்டின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. எதையும் கணக்கெடுக்காமல் நாட்டு மக்களின் எதிர்ப்பைக் கொடுங்கோலாட்சி மூலம் நசுக்கும் நடவடிக்கைகளில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

சர்வதேச நாடுகளிடையேயும் தமக்குச் சார்பானவர்களை நாடி வருகிறது மியான்மார் இராணுவம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மியான்மார் இராணுவத்தைப் பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும் கூட இரகசியமாக அவர்களுடன் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா, ரஷ்யா ஆகியோரின் உதவியுடன் ஐ.நா சபையினுள் நுழையவும் மியான்மார் இராணுவம் முயன்று வருவது ஏற்கனவே ஒரு தடவை தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் தடவையும் அதற்கான முயற்சிகளில் பலமாக ஈடுபட்டு வருகிறது மியான்மார்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படமுதல் இருந்த ஜனநாயக அரசினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியான Kyaw Moe Tun தொடர்ந்தும் அவ்விடத்தில் நாட்டுக்கான பிரதிநிதியாகச் செயற்படுகிறார். இராணுவத்தினர் அவரைக் கொல்ல எடுத்த முயற்சிகள் தோற்றுப்போயின. Kyaw Moe Tun ஐ மியான்மாருக்கு வெளியேயிருக்கும் நிழல் அரசாங்கத்தினரும் ஆதரித்து வருகின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *