மறைந்த சாதனையாளர் பெலேயின் நினைவாக அரங்கமொன்றுக்கு அவரது பெயரை இட்டது கொலம்பிய நகரமொன்று.

தனது 82 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த உதைபந்தாட்ட வீரர் பெலேயை கௌரவப்படுத்த கொலம்பிய நகரமொன்றின் அரங்கத்துக்கு அவரது பெயரிடப்பட்டது. 1958 ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 15,000 பேரைக் கொள்ளக்கூடிய பெல்லோ ஹொரிசண்டே அரங்கம் இனிமேல் “BELLO HORIZONTE ‘REY PELE” என்றழைக்கப்படும்.  

பெலேயின் மரணச்சடங்குகள் 03ம் திகதி செவ்வாயன்று அவர் தனது பெரும்பாலான உதைபந்தாட்ட வாழ்வை வாழ்ந்த சந்தோஸ் நகரில் நடத்தப்பட்டு அங்கே அவரது பூதவுடல் புதைக்கப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட லூலா டா சில்வாவும் பல்லாயிரக்கணக்கில் குவிந்த பெலேயின் விசிறிகளுடன் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்.

உதைபந்தாட்ட உலகின் அதிசிறந்த திறமையாளர் என்று கருதப்படும் பெலேயை கௌரவிக்குமுகமாக அவரது பெயரை உதைபந்தாட்ட அரங்கங்களுக்கு இடவேண்டும் என்று சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் அதிபர் ஜியானி இன்பண்டீனோ கேட்டுக்கொண்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட தெற்கு கொலம்பியாவின் ஆளுனர்களில் ஒருவரான ஹுவான் குல்லேர்மோ ஸுலுவாக தனது பிராந்தியத்திலிருக்கும் வில்லாவிசன்சியோ நகரின் அரங்கத்துக்கு பெலேயின் பெயரை வைப்பதாக அறிவித்தார்.

அதே தினத்தில் கேப் வர்டேயின் பிரதமர் ஹோசே உலிசில் கொரேரா எ சில்வா நாட்டின் தலைநகரிலிருக்கும் தேசிய அரங்குக்கு பெலேயின் பெயரை வைப்பதாக அறிவித்திருந்தார். சுமார் 15,000 பேர் இருக்கக்கூடிய “Estadio Nacional de Cabo Verde” என்ற அந்த அரங்கு பெலே அரங்கு என்று பெயர் மாற்றப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *