பெற்றோல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கைச்சாத்திட்டது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் பெற்றோல் கிணறுகளைக் கட்ட முதலீடு செய்யவிருக்கிறது சீனா. அதற்கான ஒப்பந்தந்தத்தில் ஆப்கானிஸ்தான் பிரதமர் மந்திரி முல்லா அப்துல் கானி பரதாருடன் சீன நிறுவனமொன்று கைச்சாத்திட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
தலிபான் அரசு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் நாட்டின் இயற்கை வளங்களுக்காக வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் செய்யப்பட்டிருக்கும் முதலாவது ஒப்பந்தம் இதுவாகும். சீனாவைச் சேர்ந்த ஷின்யியாங் சென்ரல் ஆசியா பெற்றோலியம் அண்ட் காஸ் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. அடுத்து வரும் 25 வருடங்களுக்கு வருடாவருடம் 150 மில்லியன் டொலர்கள் அதற்காக முதலீடு செய்யப்படும்.
சுமார் 4,500 சதுர கி.மீ பரப்பளவில் நிறுவப்படவிருக்கும் அந்த எண்ணெய் உறிஞ்சும் பிராந்தியத்தில் சுமார் 1,000 – 23,000 தொன் வரை பெற்றோலியம் உறிஞ்சப்படலாம். ஆரம்பக் கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அரசு அந்த நிறுவனத்தில் 20 % ஐப் பெற்றிருக்கும். அது படிப்படியாக 75 % வரை அதிகரிக்கப்படும். சுமார் 3,000 ஆப்கானியர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்