அமெரிக்க மகாராணிக்குக் கொடுக்கப்படவிருக்கிறத, பின்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து.
சமீப வருடங்களில் வெளியாகிய பல ஆராய்ச்சிகள் தேனீக்களின் சமூகங்கள் வியாதிகளால் அழிக்கப்படுவதாகத் தெரியப்படுத்தின. உணவுப் பொருட்களின் தயாரிப்புக்கு அத்தியாவசியமாக இருப்பவை தேனீக்களாகும். அமெரிக்காவின் தேனீக்களை அழித்துவந்த American foulbrood என்ற வியாதிக்கான மருந்தை அமெரிக்கா பாவனைக்கு அனுமதித்திருக்கிறது. தேனீக்களைக் காப்பாற்றுவதற்கான உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து பின்லாந்தின் தயாரிப்பாகும்.
குறிப்பிட்ட மருந்தானது அமெரிக்காவின் தேனீக்கள் சமூகம் முற்றாக அழிந்துபோகாமலிருக்க, அல்லது பலவீனமடையாதிருக்க உதவும். அந்தத் தடுப்பு மருந்தானது தேனீக்கள் சமூகங்களின் ராணிகளுக்குக் கொடுக்கப்படும். மேலும் ஒரு வருடத்துக்குள் அந்தத் தடுப்பு மருந்து தேனீக்களை வளர்ப்பவர்களுக்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
American foulbrood வியாதிக்கு எவ்வித மருந்துமே கிடையாது. குறிப்பிட்ட பிராந்தியத்தில் தேனீக்களிடையே அவ்வியாதி பரவுமானால் அந்தத் தேனீச் சமூகத்தையும் அவைகளை வளர்ப்பதற்காகப் பாவிக்கப்படும் சகல உபகரணங்களோடு அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்து மீது பெரும் எதிர்பார்ப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
தேனீக்கள் இல்லையெனில் உலகின் விவசாயமே முற்றாக ஒழிந்துவிடும். உலக மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களைத் தயாரிப்பதற்கு தேனீக்களின் இயற்கையான மகரந்தச் சேர்க்கை உதவி அவசியமானது. தடுப்பு மருந்தானது தேனீக்களின் சமூகங்களைக் குறிப்பிட்ட வியாதியிலிருந்து பாதுகாக்க உதவுமானால் உலகின் உணவு உற்பத்திக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து விலக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்