ஆப்கான் பெண்கள் உரிமைகள் பறிப்பைத் தண்டிக்க அவர்களுடன் விளையாட மறுத்த ஆஸ்ரேலியா.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடங்களில் படிப்படியாகத் தமது நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைப் பெரும்பாலும் வீட்டைவிட்டே வெளியேற முடியாமல் செய்திருக்கிறார்கள். அவ்வரிசையில் சமீபத்தில் நாட்டில் செயற்படும் மனிதாபிமான இயக்கங்களின் சேவைகளிலும் பெண்கள் பங்குபெறலாகாது என்று தடைசெய்த தலிபான்கள் மீது உலக நாடுகளெல்லாம் தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றன. அதன் வழியில் ஆஸ்ரேலியா வரவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் மோதல்களில் ஆப்கானிஸ்தானுடன் மோதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.
ஜனவரி 12 ம் திகதியன்று ஆஸ்ரேலிய கிரிக்கெட் அமைப்பு எடுத்த முடிவின்படி மார்ச் மாதத்தில் எமிரேட்ஸில் நடக்கவிருக்கும் ஒரு நாள் மோதல்களில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்ரேலிய அணி நேரிடாது. அதற்கான காரணம், தலிபான்களின் அரசு தனது நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்திருப்பதே என்று காரணம் வெளியிடப்பட்டிருக்கிறது. “உலகெங்கும் வாழும் ஆண், பெண்களின் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சியையே நாம் ஆதரிக்கிறோம். ஆப்கானிஸ்தானிலும் அதே விதமான வளர்ச்சியையே நாம் விரும்புகிறோம்,” என்கிறது ஆஸ்ரேலிய கிரிக்கெட் அமைப்பு.
ஆஸ்ரேலியா எடுத்திருக்கும் முடிவானது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சீற்றமடைய வைத்திருக்கிறது. “ஆப்கானிஸ்தான் மக்களின் தேசியப் பற்றை வளர்ப்பதில் கிரிக்கெட் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. பல வருடங்களாகப் போரால் சீரழிந்திருக்கும் நாட்டு மக்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு ஓரளவு நல்லுணர்வைக் கொடுத்து வருகிறது. அந்த விளையாட்டானது ஆப்கான் மக்களுக்கு, முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஆஸ்ரேலியா எடுத்திருக்கும் பரிதாபகரமான முடிவானது எங்களை கவலைக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது,” என்று ஆப்கான் கிரிக்கெட் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்