விபத்துக்குள்ளாகிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 68 சடலங்கள் எடுக்கப்பட்டன.
72 பேருடன் நேபாளத்தில் விபத்துக்குள்ளாகிய விமானம் சிதறிய இடத்தில் மேலும் 4 பேரைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், எவராவது தப்பியிருக்கலாம் என்ற நம்பிக்கை அற்றுப் போயிருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். திங்களன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கை விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியது.
காட்மண்டுவிலிருந்து புறப்பட்ட விமானம் பொக்காஹாரா விமான நிலையத்தில் இறங்க ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே பறக்கும் நேரம் சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே. தெளிவான காலநிலையாக இருந்த அச்சமயத்தில் விபத்து ஏற்பட்டது பற்றிய கேள்விக்குறிகள் பலவற்றுக்கு விமானத்தின் கறுப்புப்பெட்டிக்குள் இருந்து வெளியாகும் விபரங்கள் பதிலளிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேபாளத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொக்காஹாரா மிகவும் பிரபலமான சுற்றுலாப் பிராந்தியமாகும். காட்மண்டுவிலிருந்து அந்த நகரை வாகனத்தில் சென்றடைய ஆறு மணிகளுக்கும் மேலாகும் என்பதால் குறிப்பிட்ட சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே திறக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் விமானங்களின் போக்குவரத்துக்களை எதிர்கொல்வது பற்றிய தெளிவான வழிமுறைகள் இருக்கவில்லை என்று நேபாளச் செய்திகள் குறிப்பிட்டிருக்கின்றன.
2000 ம் ஆண்டுக்குப் பின்னர் நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்துக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 350 ஆகும். எவரெஸ்ட் உட்பட்ட உலகின் எட்டு உயரமான மலைச்சிகரங்களைக் கொண்ட நாடான நேபாளத்தில் காலநிலைகள் திடீரென்று மாறுவது வழக்கமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்