கிழக்கு ஜெருசலேம் யூதர்கள் மீது அடுத்தடுத்து இரண்டாவது நாளும் துப்பாக்கித் தாக்குதல்கள்.
இஸ்ராயேலின் புதிய அரசு அங்கே வாழும் பாலஸ்தீனர்களைக் கடுமையான முறையில் கையாளப்போவதாகச் சூழுரைத்துப் பதவியேற்றது. அத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி தருவதாக பாலஸ்தீனர்களின் தரப்பிலும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். வெள்ளிக்கிழமையன்று பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினரினால் கிழக்கு ஜெருசலேம் சினகூகாவில் [யூத தேவாலயம்] தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் ஏழு பேர் இறந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
யூதர்கள் அழிப்பை நினைவுகூரும் நாளான வெள்ளிக்கிழமையன்று யூதர்கள் தமது ஓய்வு நாள் தொழுகையை முடித்துக்கொண்டு வெளியேறும்போது அவர்கள் மீது ஒருவனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் குடும்பம், பக்கத்து வீட்டினருட்பட 42 பேர் இஸ்ராயேல் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சினகூகாவுக்கு இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு விஜயம் செய்தார். அங்கிருந்து அவர் வெளியிட்ட செய்தி, பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும், அரசு திடமான முடிவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றாக இருந்தது.
சனிக்கிழமையன்று ஒரு தந்தையும் மகனும் அதே கிழக்கு ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கிச்சூடுபட்டிருக்கிறார்கள். ஒரு 13 வயதுப் பையன் அவர்கள் மீது தாக்கியபோது அவனைப் பொலீசார் சுட்டிருக்கிறார்கள். அவனது நிலைமை தெரியவில்லை. துப்பாக்கிச்சூடுபட்ட தந்தையும் மகனும் கடுமையாகக் காயப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்