உக்ரேனில் போர்க்காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
உக்ரேன் இராணுவ வீரர்களுக்காக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உணவுக் கொள்வனவு செய்தபோது அதற்கான விலையாக சாதாரண அங்காடிகளின் விலைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் தினசரியொன்று விபரங்களை வெளியிட்டிருக்கிறது. உலக நாடுகளிடம் போர்க்காலத்தில் பலவித உதவிகளையும் பெற்றுவரும் உக்ரேனில் இப்படியான ஊழல் நடந்திருப்பது நாட்டின் ஜனாதிபதி செலென்ஸ்கியை இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் குறிப்பிட்ட உணவுக்கான ஒப்பந்தம் சுமார் 340 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும். தம்மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தவறானது என்கிறது பாதுகாப்பு அமைச்சகம். அதேசமயம் அதுபற்றிய விபரங்களை வெளிவராமல் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு உக்ரேன் அரச இயந்திரத்தின்மீது சமீப காலத்தில் சாட்டப்பட்டிருக்கும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஒன்று மட்டுமே.
இதற்கு முன்னர், நாட்டின் போக்குவரத்து உப அமைச்சர் தனது திணைக்களத்துக்காக வாங்கிய தளபாடங்கள் பலவற்றுக்கு அளவுக்கதிகமான விலையை ஒப்பந்தம் மூலம் கொடுத்து லஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பதவியிழந்திருக்கிறார்.
போர் ஆரம்பிக்க முன்னரே உக்ரேனின் அரசியல்வாதிகளிடையே லஞ்ச ஊழல் பெரிய அளவில் இருப்பது பற்றிய விமர்சனங்கள் பல எழுந்திருக்கின்றன. தற்போது போர் நடக்கும்போதும் அதேபோன்ற சுய இலாப நடவடிக்கைகள் மன்னிக்கத்தக்கவையா என்ற கேள்வி பொது மக்களிடையே பரவலாக எழுதிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்