பாகிஸ்தானில் பாலமொன்றில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது, இறந்தவர்கள் தொகை 40.
தென்மேற்குப் பாகிஸ்தானில் பாலமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்த தூண் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மோதிய பேருந்து கீழிருக்கும் நதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 40 பேர் அடையாளம் தெரியாத வகையில் இறந்திருப்பதாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன.
பலூச்சிஸ்தானிலிருந்து புறப்பட்டு கராச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் 48 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே காப்பாற்றப்பட்டு மருத்துவசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாததால் மரபணுக்களைப் பரிசீலனை செய்வதன் மூலமே சடலங்கள் யாருடையவை என்று தெரிந்துகொள்ள முடியும் என்று மீட்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
வீதிப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளிலொன்று பாகிஸ்தான். வாகன ஓட்டிகள் சக வாகனங்களையும், பாதசாரிகளையும் உதாசீனம் செய்வது அங்கே வழக்கமாக இருப்பதாக சர்வதேச மக்கள் ஆரோக்கிய அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் வீதிகளில் ஓடும் வாகனங்கள் பல பழையவையாகும். அவைகளிலிருக்கும் தவறுகள் ஒழுங்காகத் திருத்தப்படுவதில்லை. 2018 இல் பாகிஸ்தானில் வீதி விபத்துக்களில் இறந்தவர் தொகை 27,000 என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு.
சாள்ஸ் ஜெ. போமன்