குரானை நிந்தித்தவனைக் கழுவேற்ற வந்த கூட்டம் பொலீஸ் நிலையத்தையே கொழுத்தியது.

பாகிஸ்தானில், கைபர் பக்தூன்க்வா பொலீஸ் நிலையமொன்றில் குரானை நிந்தித்ததற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக சுற்றுவட்டாரத்தில் விபரம் பரவியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிலையத்தின் முன்னே கூடி முற்றுகையிட்டுக் கைதுசெய்தவனைக் கழுவேற்றத் தங்களிடம் தரும்படி கூச்சலிட்டனர். பொலீசார் அதைச் செய்யாததால் அப்பொலீஸ் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களை விசாரிப்பதும், தண்டிப்பதா இல்லையா எனத் தீர்மானிப்பதும் நீதித்துறையே என்று குறிப்பிட்ட சட்ட விவகார அமைச்சர் கைது செய்யப்பட்ட நபரை பொலீஸ் நிலையத்திலிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். மனோ நிலை பாதிக்கப்பட்ட நபர் என்று பொலீஸார் குறிப்பிடும் அந்த நபர் வெளியே ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குத் தெரியாமல் வெளியேற்றப்பட்டுவிட்டார்.

ஞாயிறன்று காலையில் ஆரம்பித்த அவ்விவகாரத்தினால் அப்பிராந்தியம் முழுவதும் பதற்ற நிலை உண்டாகியது. பொலீஸ் நிலையத்தை முற்றுக்கையிட்டவர்கள் சுமார் 4,000 – 5,000 பேர் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் அந்த நகரின் வேறு பொலீஸ் காவல் நிலையங்களையும், கட்டடங்களையும் உடைத்து, நொறுக்கித் தீக்கிரையாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்