டிக்டொக் பதிவுகளில் பெற்றோராகத் தான் அனுபவிக்கும் தொல்லைகளைத் திட்டிப் பகிர்ந்த தாயிடமிருந்து பிள்ளைகள் விலக்கப்பட்டனர்.
சமூகவலைத்தளங்களின் பாவனை பிள்ளைகள் மீதான மற்றோரின் கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் சுவீடன் சமூக சேவைத் திணைக்களத்தினர். பெற்றோர் தமது நிலைமை, பிள்ளைகள், பொறுப்புக்கள் பற்றிச் சமூகவலைத்தளத்தில்பகிரும் பதிவுகளைக் கவனிப்பவர்கள் அதில் காணப்படும் விபரங்களால் பிள்ளைகளின் நிலையைப் பற்றிய கரிசனம் கொண்டு சமூகசேவைத் திணைக்களத்திடம் முறையீடுகள் செய்வது பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒரு தாயிடம் இருந்து அவரது பிள்ளைகளைச் சமூக சேவை அமைப்பு பிரித்தெடுத்திருக்கிறது.
குறிப்பிட்ட தாய் தனது பொறுப்புகள், பிள்ளைகளால் உண்டாகும் தொல்லைகள் பற்றிப் பதிவுகளை டிக்டொக்கில் பகிர்ந்து வந்தார். பதிவுகள் ஒன்றில் அப்பெண் காட்டும் உணர்வுகள் பலருக்கும் அவளது மனோநிலை பற்றிய கேள்விகளை எழுப்பின. அத்தாய் பற்றி 300 க்கும் அதிகமான முறைப்பாடுகளை அவர் வாழும் நகர சமூகசேவை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் அனுப்பினர். அதனால் தாயின் எதிர்ப்பையும் மீறி அவரது பிள்ளைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களாகவே பிள்ளைகள் பற்றிய கரிசனம் கொண்டு பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகச் சமூக சேவைத் திணைக்களம் தெரிவிக்கிறது. சமூகவலைத்தளங்களில் பெற்றோர் பதிபவைகளை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதே மொத்தமாகப் பிள்ளைகள் பற்றி வரும் முறைப்பாடுகள் அதிகரித்திருக்கக் காரணமாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்