சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில் பின்தங்கி நிற்பதும் அதிகம் என்று தெரிகிறது.   

சுவீடன் நாட்டின் வயது வந்தவர்களில் 30 % பேருக்குத் தடுப்பூசிகள் கொடுத்திருக்கிறார்கள். சுவீடனில் பிறந்த +  80 வயதானவர்களில் 91 % தடுப்பூசி பெற்றிருக்க வட ஆபிரிக்காவில் பிறந்து சுவீடனில் வாழ்பவர்களில் அதே வயதானவர்களில் 59 % உம், அதைத் தவிர்ந்த ஆபிரிக்காவின் மற்றைய பகுதிகளில் பிறந்தவர்களில் 44 % மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றிருக்கிறார்கள். 

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு அவசரகாலச் சிகிச்சை, கடுமையான சிகிச்சை போன்றவற்றைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் தான். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொவிட் 19 பற்றிய அறிவுறுத்தல்களைக் கொண்டு செல்வது அரசுக்கு மிகவும் கடினமான ஒரு விடயமாகியிருந்தது. அவர்களில் பலர் தத்தம் சமூகத்தினருடன் மட்டுமே தொடர்பு கொண்டு, அந்த மொழியில் மட்டுமே பரிச்சயமுள்ளவர்களாக இருப்பது அதற்கு ஒரு காரணம். பற்பல மொழிகளில் அரசு அந்த விபரங்களை பிரசுரித்திருந்தது. வெவ்வேறு மொழிகளைப் பேசும், வெவ்வேறு துறையினரை அவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக அரசு பாவித்திருந்தது.  

வெவ்வேறு சமூகத்தினரின் பொருளாதார நிலை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பல தலைமுறைக் குடும்பங்கள் ஒரே வீட்டில் நெருக்கமாக வாழ்வது, சேவை நிறுவனங்களில் வேலை செய்து பலரை அடிக்கடி நெருக்கமான இடங்களி சந்திக்கவேண்டியிருப்பது, குறைந்த வருமானத்தைக் கொண்டிருப்பது போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *