கரும் பூஞ்ஞை அதிகரித்தமைக்கு ஒக்சிஜன் சிலின்டர்கள் காரணமா?

இந்தியாவில் கொரோனா வைரஸுக்குப் பிந்திய புதிய தொற்று நோயாகக் கரும்பூஞ்சை எனப்படும் பங்கஸ் நோய்(black fungus) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

திடீரெனக் கரும் பூஞ்ஞை நோயாளிகள் அதிகரிப்பது ஏன் என்பது பற்றிய ஆய்வுகள் அங்கு நடக்கின்றன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளியாகி இருக்கின்ற ஆய்வு ஒன்று கரும்பூஞ்ஞை அதிகரிப்புக்கு ஒக்சிஜன் சிலின்டர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

திடீரென நாடு முழுவதும் மருத்துவ ஒக்சிஜன்(medical oxygen) தீர்ந்து போனதால் ஏற்பட்ட பேரவலம் தொழிற்சாலைத் தேவைகளுக்கான ஒக்சிஜனின்(industrial oxygen) பயன்பாட்டை அங்கு அதிகரிக்கச் செய்தது.

மருத்துவ ஒக்சிஜனை அடைக்கின்றசிலின்டர்களும் தொழிற்சாலை ஒக்சிஜனை அடைக்கின்ற சிலின்டர்களும்(cylinders) ஒன்றல்ல. தூய்மை மற்றும் தொற்று நீக்கல் இரண்டிலும் அவை ஒரே விதமாகப் பேணப்படுவதில்லை.

தொழிற்சாலை சிலின்டர்கள் நுண் கசிவுகள் மற்றும் மாசுகள் கொண்டவையாக இருப்பது சகஜம். அது ஒரு போதும் மருத்துவத் தேவைகளுக்குப் பாவிக்கப்படுவதில்லை. மருத்துவ ஒக்சிஜனுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் அவசர உயிர் காக்கும் தேவைக்காக பெருமளவு தொழிற்சாலை ஒக்சிஜன் சிலின்டர்கள் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலைத் தேவைக்கான ஒக்சிஜனும் அடிப்படையில் மிகத் தூய்மையானதுதான் என்றாலும் அதை அடைக்கப் பயன்படும் சிலிண்டர்கள்அனைத்தும் மருத்துவத்தரத்தில்பேணப்படுவதில்லை.

சிலின்டர்கள் மூலம் மாசடைந்த ஒக்சிஜன் காரணமாக பங்கஸ் கிருமிகள் நோயாளிகளுக்குப் பரவி கரும் பூஞ்ஞை அதிகரித்திருக்கலாம் என்பதை சில மருத்துவ நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

mucormycosis எனப்படும் கரும் பூஞ்ஞைநோய் ஏற்கனவே மனிதர்களில் காணப்படுகின்ற ஒரு தொற்று நோய். அது புதியது அல்ல. தரையிலும் மாசடைந்த பழைய பொருள்களிலும் தோன்றும் பங்கஸ் கிருமிகள் காற்றின்வழியாக மனிதருக்குப் பரவி சுவாச உறுப்புகள், கண்கள் போன்றவற்றில் தாக்கங்களை உருவாக்குகின்றன. நீரிழிவு நோயாளிகள் போன்ற பலவீனமான – நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடையே- அது தீவிர விளைவுகளையும் உயிரிழப்புகளையும் குருட்டுத் தன்மையையும் ஏற்படுத்துகின்றது.

கொரோனா நோய் வைரஸ் காரணமாகப் பரவுகிறது. கரும் பூஞ்ஞை பங்கஸ் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் கொரோனா வைரஸ் உருவாக்கியிருக்கின்ற மருத்துவச் சீரழிவு நிலைமைகள் பங்கஸ் எனப்படுகின்ற பூஞ்ஞை நோய் பரவலுக்கானசூழலைச் சாதகமாக்கி உள்ளன.

அடிப்படை மருத்துவ வசதிகள் குறைந்த இந்தியா போன்ற நாடுகளில் இப்போது தோன்றியுள்ள மருத்துவக் கட்டமைப்புச் சிதைவுகள் காரணமாக பூஞ்சை நோய் போன்ற புதிய தொற்றுக்கள் தலையெடுப்பதில் வியப்பேதும் இல்லை.

இலங்கை மக்களிடையேயும் கரும் பூஞ்ஞை பரவல் பற்றிய பய பீதிகள் எழுந்துள்ளன. ஆனால் பூஞ்ஞை என்பது கொரோனா போன்ற ஒரு தீவிரமான பெரும் தொற்று நோய் பரப்பும் கிருமி அல்ல. எனவே அது பற்றிய அச்சங்கள் வீணானவையே.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *