“உலகின் எந்த நாட்டையும் விட மோசமான பொருளாதார வீழ்ச்சியை 2023 இல் ஐக்கிய ராச்சியம் சந்திக்கும்!”

“ரஷ்யா உட்பட்ட உலகின் எந்த நாட்டின் பொருளாதாரத்தையும் விட மோசமான பொருளாதார நிலைமையை இவ்வருடத்தில் ஐக்கிய ராச்சியன் எதிர்கொள்ளும்,” என்ற கணிப்பை வெளியிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம். உலகின் மற்றைய நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடப் பலமடைந்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நாணய நிதியம்,  பொருளாதாரத்தில் ஐக்கிய ராச்சியம் மேலும் பலவீனமடைந்து வருவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

ஐக்கிய ராச்சியத்தின் உள்நாட்டுப் பொருளாதாரம் 0,6 %  – 0,9% ஆல் 2023 இல் வீழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு முந்தைய கணிப்பீட்டு அறிக்கையில் ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதாரம் இவ்வருடம் 0,3 % ஆலும், அடுத்த வருடம் 0,6 % ஆலும் வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது.

சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஐக்கிய ராச்சியத்தில் மக்களின் கொள்வனவுத் தகைமை பலவீனமடைந்திருக்கிறது. நாட்டின் நிறுவனங்களின் தயாரிப்புச் செலவு அதிகரித்திருப்பதால் இலாப எதிர்பார்ப்புக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு தனது பொதுப்பணித்துறைச் செலவுகளைக் குறைத்ததுடன் வரிகளையும் உயர்த்தியிருக்கிறது. அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமாகும் என்று மதிப்பிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.

ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார அமைச்சர் தனது நாட்டின் பொருளாதாரம் உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது பலமானதாக இருப்பதாகவும், அது கொஞ்சமாவது வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். புதிய அறிக்கையோ அதை மாற்றியிருக்கிறது. ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் பலவீனமடையும் என்று குறிப்பிட்டிருந்த நிதியம் புதிய கணிப்பீட்டில் அவை இலேசாக வளரும் என்று குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *