கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயத்தை ஆரம்பிக்கிறார் பாப்பரசர்.
பாப்பரசர் பிரான்சீஸ் செய்யும் அடுத்த விஜயம் கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்காகும். ஜனவரி 31 ம் திகதி செவ்வாயன்று அவர் தனது விஜயத்தை கொங்கோவில் ஆரம்பிக்கிறார். 2013 இல் பாப்பரசராகத் தெரிவுசெய்யப்பட்ட பிரான்சீஸ் செய்யும் 40 வது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். தொடர்ந்து நீண்ட காலமாக இரத்தக்களரிகளை உண்டாக்கும் போர்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் அவ்விரண்டு நாடுகளில் சமாதானத்தைப் பரப்பவே தான் இந்த விஜயத்தைச் செய்வதாக பாப்பரசர் தெரிவித்தார்.
2011 ம் பிறந்த நாடான தென் சூடான் ஆரம்பம் முதல் வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயான போர்களால் சிதறியிருக்கிறது. மோதிக்கொள்ளும் குழுக்களில் எவரும் மற்றவருடம் சமாதானமாக ஒன்றிணைந்து அரசமைக்கத் தயாராக இல்லை. சுமார் 400,000 பேர் கொல்லப்பட்டு, மில்லியன் கணக்கில் மக்கள் தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் அமைதி உண்டாகவில்லை.
1990 களின் பிற்பகுதியில் ஆரம்பித்தது கொங்கோ குடியரசின் பிளவுகள். விலையுயர்ந்த இயற்கை வளங்களைக் கொண்ட நாட்டில் அவைகளின் உரிமையைத் தமதாக்கும் எண்ணத்துடன் பிளவுகள் ஏற்பட்டு அது தொடர்கிறது. நூற்றுக்கும் குறையாத ஆயுதம் தாங்கிய குழுக்கள் தமக்குள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 மில்லியன் பேர் கொல்லப்பட்டு, அங்கும் மில்லியன்கள் மக்கள் விரட்டப்பட்டு வெவ்வேறு பகுதிகளிலும் நாடுகளிலும் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
செவ்வாயன்று கொங்கோ குடியரசின் தலைநகரான கின்ஷாஷாவை வந்தடையும் பாப்பரசர் வெள்ளிக்கிழமை வரை அங்கே தங்கியிருப்பார். வெள்ளியன்று அவர் தென் சூடான் தலைநகரான ஜூபாவை நோக்கித் தன் பயணத்தைத் தொடருவார்.
தென் சூடானில் பாப்பாண்டவருடன் சேர்ந்து மக்களைச் சந்திக்கவிருப்பவர் கன்ரபெரி அதி மேற்றிராணியார் ஜஸ்டின் வெல்பி, ஸ்கொட்லாந்து தேவாலயத்தின் பிரதிநிதி இயன் கிரீன்ஷீல்ட்ஸ் ஆகியோராகும். அவர்கள் 2019 இல் தென் சூடானில் போரிடும் குழுக்களின் தலைவர்களின் கால்களை உண்மையிலேயே பிடித்து சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்