தனது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது.
உலகின் முக்கியமான பெற்றோல்வள நாடான ரஷ்யா தனது எண்ணெய்த் தயாரிப்பை 5 விகிதத்தால் குறைப்பதாக அறிவித்தது. நாட்டின் உப பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தாம் மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தினசரித் தயாரிப்பில் 500,000 பீப்பாக்களைக் குறைக்கவிருப்பதாகத் தெரிவித்தார். மேற்கு நாடுகள் தாம் கொள்வனவு செய்யும் பெற்றோலுக்காக விலை ஆகக்கூடிய விலை எல்லையை விதித்திருப்பதற்குப் பதிலடியாகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தண்டிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகச் சமீபத்தில் முன்னர் ஐரோப்பிய ஒன்றியம், ஜி 7 மற்றும் ஆஸ்ரேலியா அறிவித்த நகர்வொன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் ரஷ்ய பெற்றோலியப் பொருட்களைக் கையாளலாகாது, நாடுகள் தாம் கொள்வனவு செய்யும் பெற்றோல் விலைக்கு ஒரு உயர்மட்ட விலை எல்லை போடவேண்டும் என்றெல்லாம் அறிவித்திருந்தது. அதை எதிர்கொள்ளவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்து உலகச் சந்தையில் பெற்றோலின் விலையை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.
ரஷ்யாவின் அறிவிப்பானது உடனடியாகப் பலனளிக்கவும் செய்தது. சர்வதேசச் சந்தையில் பெற்றோலின் விலை 2 விகிதத்தால் வெள்ளிக்கிழமையன்று உயர்ந்தது. ரஷ்யாவின் தயாரிப்புக் குறைப்பானது உலகப் பெற்றோலியத் தயாரிப்பில் 0.5% ஆகும்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகச்சந்தையைத் தாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஏற்படுத்த அவர்கள் செய்யும் பிரயத்தனமே தவிர அதனால் பாதிப்பு ஒன்றும் பெரியதாக ஏற்படப்போவதில்லை என்கிறார்கள் உலக வர்த்தகம் பற்றி ஆராய்பவர்கள். வளர்ந்த நாடுகள் தமது முடிவை எடுக்கும்போது ரஷ்யாவின் பதில் நகர்வுகளுக்குத் தயாராகியிருந்தன. வறிய நாடுகளே பாதிப்புக்குட்படலாம் என்கிறார்கள் அவர்கள்.
ரஷ்யாவின் தயாரிப்பிலிருந்து உலகச்சந்தைக்கு வரும் எண்ணெயின் அளவு சமீப வாரங்களில் அளவுக்கதிகமாக இருந்தது. அதனால், அவர்களிடம் கொள்வனவு செய்பவர்கள் அதிகமான கழிவுவிலையை எதிர்பார்த்தார்கள். 50 % அளவு குறைந்த விலையில் ரஷ்யா விற்கவேண்டியிருந்தது. தயாரிப்பைக் குறைத்தால் அவர்கள் தமது கழிவை 40 விகிதமாக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பின் காரணம் அவர்கள் தமது நாட்டுக்கு எண்ணெய் விற்பனையால் வரும் வருமானம் குறையலாம் என்று கணித்திருப்பதாலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்