பூமியதிர்ச்சியால் வீடிழந்தவர்களுக்கு கத்தார்2022 இல் பாவிக்கப்பட வீடுகள், கூடாரங்கள் நன்கொடை!
கடந்த வாரம் துருக்கி, சிரியா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒரு வாரமாக திறந்த வெளியில் வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளை இழந்தோர், மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் இடியாமலிருப்பினும் அதற்குள் சென்று வசிக்கப் பயப்படுகிறார்கள் பெரும்பாலானோர். இந்த நிலையில் கத்தார்2022 சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பை மோதல் சமயத்தில் தங்குமிடங்களாகப் பாவிக்கப்பட்ட வீடுகள், கூடாரங்களை அனுப்பி உதவுகிறது கத்தார்.
சர்வதேச அளவில் மீட்புப்படைகள் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இறந்த உடல்களே இடிபாடுகளுக்கு இடையேயிருந்து வெளியெடுக்கப்படும்போது, அவ்வப்போது ஓரிருவர் உயிருடன் காப்பாற்றப்பட்டும் வருகிறார்கள். இறந்தோர் எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.
திறந்த வெளியில் வாழ்வோருக்குச் சவாலாக அப்பிராந்தியங்களில் மழையும், குளிரும் பரவியிருக்கிறது. அவர்களுக்கான சுகாதார வசதிகள் இல்லாமையால் வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் அங்கே பரவி அதனாலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்கூடும் என்ற எச்சரிக்கையைப் பல தொண்டு நிறுவனங்களும், ஐ.நா-வின் மக்கள் ஆரோக்கிய அமைப்பும் சுட்டிக் காட்டியிருக்கின்றன. இந்த நிலையில் தங்குமிடங்கள் திறந்த வெளியில் வாழ்வோருக்கு அவசியமானதாக இருக்கிறது.
இயற்கையழிவுக்குப் பின்னர் துருக்கிக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவரான கத்தாரின் மன்னர் ஷேய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி துருக்கிய ஜனாதிபதியைச் சந்தித்தார். அதையடுத்து, திங்களன்றே டொஹா துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் கத்தார் 2022 காலத்தில் பாவிக்கப்பட்ட வீடுகள், கூடாரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பப்படுகின்றன. உலகக்கோப்பை மோதல்கள் திட்டமிடப்பட்ட சமயத்திலேயே அச்சமயத்தில் பாவிக்கப்படும் பலவற்றை நன்கொடையாகத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதாக கத்தார் உறுதியளித்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்