கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவின் 67 வது கூட்டுக்கொலை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கி வன்முறை நடந்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தினுள்  தனியொருவர் துப்பாக்கியால் பலரைச் சுட்ட சம்பவங்களில் இது 67 வது ஆகும். திங்களன்று நடுச்சாமத்தை நெருங்கும்போது ஆரம்பித்த இந்தச் சம்பவத்தின் முழு விபரங்களையும் பொலீசார் வெளிப்படுத்தவில்லை. இறந்தோர் எண்ணிக்கை 3 என்றும் சுமார் 5 பேர் பலமாகக் காயமடைந்ததால் மருத்துவ உதவி பெற்று வருவதாகவும் ஊடகங்கள் பல குறிப்பிடுகின்றன.

பல்கலைக்கழகத்துக்குத் தொடர்பில்லாத 43 வயதான ஒருவனே தன்னிடமிருந்த துப்பாக்கியால் கொலைகளைச் செய்துவிட்டுத் தன்னையும் மாய்த்துக்கொண்டதாக பல்கலைக்கழகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்கள் எவரென்றும், அவர்கள் மாணவர்களா என்பதும் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பொலீசார் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டபின்னரே அவ்விபரங்கள் வெளியிடப்படும். 

கொலைகளைச் செய்தவன் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் உள்ளே வரக்கூடிய பகுதிகளுக்குள் தனது துப்பாக்கிகளுடன் நுழைந்தே அக்கொலைகளைச் செய்தவை அங்கிருக்கும் கண்காணிப்புப் படங்களின் மூலம் தெரியவருகிறது. எனவே, குறிப்பிட்ட நபர் திட்டமிட்டே அக்கொலைகளைச் செய்ததாகத் தெரியவருகிறது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் தான் அவனது குறியா அல்லது அகப்பட்டவர்களைக் கொன்றானா, காரணமென்ன போன்ற விபரங்களை அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *