சவூதிய வீடுகளில் வேலைசெய்பவர்கள் எஜமானரின் அனுமதியின்றி புதிய வேலை தேடிக்கொள்ளலாம்!
சவூதி அரேபியாவின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் அங்கே வீடுகளில் வேலைசெய்பவர்களுக்குப் புதிய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தமது எஜமானுடன் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தல் உட்பட்ட சில பிரச்சினைகள் இருப்பின் எஜமானின் சம்மதமின்றி இன்னொருவரிடம் தனது விசாவை மாற்றிக்கொள்ளலாம். தொழிலாளர்களின் நலங்களைப் பாதுகாப்பதற்கும் இரு தரப்பாருக்கும் சமமான உரிமைகளைக் கொடுப்பதற்காகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எண்ணெய் வள நாடுகளில் வேலைசெய்பவர்கள் அங்கே வாழும்பவரை, தாம் எந்த ஒருவரிடம் விசாவைப் பெற்றுக்கொண்டாரோ அவரின் அதிகாரத்தின் கீழேயே தொழிலாளராக இருக்கவேண்டுமென்ற கட்டாயமே நீண்ட காலமாக நிலவிவந்தது. இதனால் தனது முதலாளி\விசா கொடுத்தவர் தன்னை எப்படி மோசமாகக் கையாண்டாலும் அவரிடமிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு தொழிலாளர்களுக்கு இல்லாமலிருந்தது. வறிய நாடுகளிலிருந்து பெரும் தொகையைச் செலவிட்டு எண்ணேய் வள நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள் எஜமானிடம் உரசினால் எல்லாமே பறிபோய்விடுமென்ற பயத்தில் மூச்சுக்காட்டாமல் வேலை செய்து வந்தனர்.
அந்த நாடுகளில் வீடுகளில் வேலைசெய்பவர்கள் – முக்கியமாகப் பெண்கள் – இதனால் மிகவும் பாதிக்கப்பட்டனர். பலரும் தமது எஜமானர்களின் பாலியல் இச்சைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகுவது வழக்கம். இதுபற்றிய விமர்சனங்கள் சர்வதேச அளவில் நீண்ட காலமாகவே எழுக்கப்பட்டு வந்தது. சமீப வருடங்களில் ஒவ்வொரு நாடாகத் தொழிலாளர்கள் – எஜமானர்கள் பற்றிய சட்டங்களை மாற்றி வருகின்றன.
சவூதி அரேபியாவில் வீடுகளில் வேலை செய்பவர்கள் தமது எஜமானின் கையாளலில் அதிருப்தியால் புதிய இடத்தில் வேலைசெய்யும் வாய்ப்பைத் தேடிக்கொண்டால் 15 நாட்களில் புதிய எஜமானரிடம் தனது விசாவைச் சட்டப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று சட்டமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய எஜமானர் தனது தொழிலாளி இடைக்காலத்தில் முகாம்களில் வாழ்ந்திருப்பின் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்