ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான மனக்கசப்பால் முக்கிய எல்லை மூடப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயிருக்கும் தோர்க்காம் எல்லை இரண்டு நாடுகளுக்குமிடையே பயணிப்பவர்களுக்காக மூடப்பட்டிருப்பதாக இரண்டு தரப்பினரும் அறிவித்திருக்கிறார்கள். தோர்க்காம் பகுதியின் அதிகாரியான முல்லா முஹமது சித்தீக் வெளியிட்டிருக்கும் செய்தி, “பாகிஸ்தான் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததால் அவ்வழி மூடப்பட்டிருப்பதாக,” என்கிறது.
தோர்க்காம் எல்லையின் இரண்டு பகுதியினரும் ஆயுதத்தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அப்பகுதியில் வாழ்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தோர்க்காம் எல்லையே இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெறும் பொதுப்போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்துக்களுக்கான முக்கிய வழியாகும். மிக நீண்ட எல்லையைத் தமக்கிடையே கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே அந்த எல்லையினுடாகப் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கும் தீவிரவாதிகள் காரணமாகச் சச்சரவு உண்டாகித் தொடர்கிறது. பாகிஸ்தான் தலிபான்கள் பாகிஸ்தானுக்குள் தமது கைவரிசையைக் காட்டாமலிருக்க ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் கட்டுப்படுத்தவில்லை என்பது பாகிஸ்தானிய அரசின் குற்றச்சாட்டாகும்.
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் பிலவால் புட்டோ சர்தாரி கடந்த வாரம் மியூனிச்சில் நடந்த பாதுகாப்பு பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டபோது ஆப்கானிஸ்தானிய எல்லையைச் சுற்றி அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பரவலாம் என்று எச்சரித்தார். அதுபற்றி ஆப்கானிய அரசின் பிரதிநிதி தனது எரிச்சலை ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். தனது ஆட்சியிலிருக்கும் பிராந்தியத்தை மற்ற நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான மைதானமாக்க அனுமதிக்கமாட்டோமென்று தலிபான்கள் பல தடவைகள் உறுதியளித்திருந்தாலும் அது உண்மையல்ல என்று நிரூபிக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்