தமிழரும் ஆடியும்
தமிழரும் ஆடியும்
ஆடிப் பெருக்கு
நீரின்றி அமையாது உலகென்ற வள்ளுவமும்
வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்
சங்கக் கிளவி செப்பிய வார்த்தைதனும்
புனலின் அருமைதனை பூவுலகிற்கு சொன்னதன்றோ!
சிலம்புக் காப்பியத்தில் உழவன்கோதைப் பாடலிலே
புதுப்புனல் பெருக்கதனை பூரித்துச் சொல்வாரே
பொன்னியின் செல்வனிலே புதுப்புனல் பெருக்கத்திலே
கதைமாந்தர் அறிமுகத்தை கல்கியும் செய்திடுவார்!
விதைகளின் முளைப்புத் திறனறியும் மாதிரிசோதனையே
முளைப்பாரி என்னும் விதைமுளைப்பு சோதனையே
பல்வேறு கலயத்தில் வெவ்வேறு விதையிட்டு
சீராய் முளைத்திருக்கும் விதையெடுத்து விதைத்திடுவர்!
ஆடிப்பட்டம் தேடிவிதைத்த கன்னலும் நெல்லும்
தைத்திங்கள் நன்னாளில் அறுவடை செய்வர்
உழவனை வாழ்விக்க வரும் புதுப்புனலை
மலர்தூவி வரவேற்று முளைப்பாரி அதில்கலப்பர்!
உழவர் திருநாள்போல் உலகத் திருநாளே
ஆடிப் பெருக்கதுவும் புதுப்புனலின் வழிபாடே
சமயமும் சாதியும் இதில் கலப்பதில்லை
வான்மழையும் வருபுனலும் உலகோர்க்கு தெய்வமன்றோ!
த.தமிழ்ப்பூங்குன்றன் குமரலிங்கம்