பாரதி…!

பாரதி நீ இன்றிருந்தால் பாரத அரசு
விடுதலைப் போர்வீரர்களுக்கு வழங்கும்
விருது – உதவித் தொகை இவற்றை
வேண்டாவென மறுத்து மேலும் ஓர் தியாகம்
செய்த தியாகியாய் சிறந்திருப்பாய் – தன்னலம்
துறந்திருப்பாய்!

தமிழுக்குச் செம்மொழி என்னும்
சிறப்புக் கிடைத்தது எண்ணி; பாரதி நீ
மகிழ்ச்சிக் கூத்தாடியிருப்பாய்!
எழுச்சிப்பா; பாடியிருப்பாய்
கோவைச் செம்மொழி மாநாட்டிற்கு வந்து
கவியரங்கத் தலைவரெனக் கவிதை
படித்திருப்பாய்! தமிழக முதல்வரைப் போற்றிக்
கவிதை வடித்திருப்பாய்!

செம்மொழி மாநாட்டுக்குச் சிறப்புடன்
வந்த தமிழறிஞர்களை; சிங்கப்பூர்; மலேசியா
போன்ற அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களை
அனைவரையும் கட்டிப் பிடித்துக் களித்திருப்பாய்!
பலே! பாண்டியா! என்று அனைவரையும் விளித்திருப்பாய்!

பாரதி நீ இன்றிருந்தால்
தீயவற்றைத் தீய்க்கின்ற தீயாய்;
தூயவற்றைக் காக்கின்ற தாயாய்;
விளங்கியிருப்பாய்! – புகழால்
துவங்கியிருப்பாய்!

எழுதுபவர் உஷா வரதராஜன்

பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *