மரணத்தோடு போராடுகிறார்களா இவர்கள்?

🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 *மீனவர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼

எல்லோரும்
ஏதோ ஒரு நாள் தான்
மரணத்தோடு
போராடுவார்கள்…..
மீனவர்கள் தான்
ஒவ்வொரு நாளும்
மரணத்தோடு
போராடுகின்றார்கள்….

மீனவர்கள்
வலை போட்டு
மீன்பிடிப்பது
எல்லோருக்கும் தெரியும்…..
ஆனால்
இலங்கை துரோகிகள்
இவர்களை பிடிக்க
வலை விரித்திருப்பது
இவர்களுக்கு


தெரிவதில்லை….

மீனவப்பெண்களின்
கழுத்தில்
தாலி கட்டப்பட்டிருந்தாலும்
கையில்
பிடித்துக்கொண்டு தான்
இருக்கிறார்கள்…..
மீன்பிடிக்கச் சென்ற
கணவன்கள்
திரும்பி வரும் வரை……

நாட்டின் பொருளாதாரமே
இவர்களால் உயர்ந்தாலும்
இவர்களின்
வீட்டு பொருளாதாரம்
இன்று வரை
உயரவே இல்லை…….!

மூச்சடைக்கி
“முத்துக்கள்” எடுத்தாலும்
இவர்களுக்கு
சொந்தமாக
இருப்பது என்னவோ
“சங்கு “மட்டும் தான்…..

கடல் நீர் மட்டம்
உயர்வதற்கு காரணம்
இவர்களின்
கண்ணீராகவும்
இருக்கலாம்…….

புயல்
தொடர் மழையால்
மீன்பிடிக்க
தடை விதிப்பது
இவர்களுக்குத் தெரியும்…..
ஆனால்
இவர்களுடைய
பசிக்கு தெரியுமா…..?

எல்லோரும்
உயிர் வாழ்வதற்கு
பணம்
பொன் பொருள்
முதலீடாக போடுவார்கள்….
இவர்கள்தான்
உயிர் வாழ
உயிரையே
முதலீடாக
போடுகின்றார்கள்……

மீன்பிடிக்க
சென்றவர்களில்
கடலில்
தொலைந்தவர்கள் தான்
எத்தனை எத்தனை பேர்…!
பிணமாக
கரை ஒதுங்கியவர்கள் தான்
எத்தனை எத்தனை பேர்…..!
இலங்கை சிறையில்
வாடுபவர்கள் தான்
எத்தனை எத்தனை பேர்…..!
வாழ்க்கையில்
போராட்டம் இருக்கலாம்
இவர்களுக்குத்தான்
போராட்டமே
வாழ்க்கையாகி விட்டது….!

இவர்கள் வாழ்க்கை
இன்னும்
“நிர்வாணமாகாமல் “
பார்த்துக் கொள்வது
“நிவாரணம்” மட்டும் தான்……

செத்துப் போன
மீனுக்கு கிடைக்கும் மதிப்பு
உயிரோடு இருக்கும்
மீனவர்களுக்கு என்று
கிடைக்குமோ ? *கவிதை ரசிகன் குமரேசன்*

🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *