யார் இவர்கள்?

*மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

வீட்டுக்குள்ளே
பெண்ணைப்
பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர்
தலை கவிழ்ந்தார்…..
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம் என்று
பாரதியார் கண்ட
கனவுகள் எல்லாம்
இன்று நிஜமானதே….!!!!

இரண்டு சக்கர வாகனம் முதல்
கனரக வாகனம் வரை ….
தொடர்வண்டி முதல்
ஆகாய விமானம் வரை
இயக்கி
ஆற்றலை நிரூபிக்கின்றனர்
பெண்கள் …..

ஒவ்வொரு ஆண்டும்
உயர்நிலை
மேல்நிலைப்பள்ளி
பொதுத்தேர்வில்
தேர்ச்சி சதவீதத்தில்
முதலிடம் பெற்று
அறிவை
நிரூபிக்கின்றனர் பெண்கள் …….!

மாவட்ட அளவிலான
விளையாட்டு
போட்டி முதல்
ஒலிம்பிக் போட்டி
வரை சென்று
பல்வேறு
கோப்பைகளையும்
பதக்கங்களையும் பெற்று
திறமையை நிரூபிக்கின்றனர்
பெண்கள்…..!!!!

வீட்டை மட்டுமல்ல
நாட்டையும் எங்களால்
பாதுகாக்க முடியும் என்று
காவலர் பணியிலும்
ராணுவத்திலும் சேர்ந்து
வீரத்தை நிரூபிக்கின்றனர்
பெண்கள்……!!!!

படிக்காதப்பெண்களும்
படித்தப்பெண்களும்
வேலைக்குச் சென்று
உடல் வலிமையை
நிரூபிக்கின்றனர்…..!

இந்தியாவின்
பொருளாதாரம்
வீழ்ச்சி அடைந்த போது
பெண்களின் சேமிப்புதான்
தூக்கி நிறுத்தியது
என்பதிலிருந்து
பெண்கள்
பொறுப்புள்ளவர்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது …..!

சாதம் மட்டுமல்ல
சாதனையையும்
படைக்கத் தெரியும் என்று
பல்வேறு துறைகளில்
பெண்கள்
நிரூபித்துக் காட்டியுள்ளனர்….!

ஆனாலும்…..

அன்று
பெண்களுக்கு
போடப்பட்ட விளங்குகளில்
கை விளங்குகள்
மட்டும்தான்
உடைக்கப்பட்டுள்ளது
கால் விளங்குகள்
இன்னும்
அப்படியே தான் உள்ளது….

வீட்டிலும் சரி
நாட்டிலும் சரி
பெண்கள்
தங்களுக்கான
உரிமைகளையும்
சமத்துவத்தையும்
போராடி போராடித்தான்
பெறவேண்டியுள்ளது….

இரவு 12 மணிக்கு
பெண் பிரச்சனையின்றி என்று
தனியாக போகிறார்களோ
அன்று தான்
இந்தியாவிற்கு
உண்மையான சுதந்திரம் என்று
காந்தியடிகள் கூறினார்
ஆனால்
இன்று
பட்டப்பகலில்
பெண்கள்
தனியாகப் போனாலும்
பாலியல் பலாத்காரம்
நடக்கின்றது…..!!!!

பெண்ணே !
உன்னை
மலர் என்பார்கள்
மயங்கி விடாதே
உன்னை நுகர்வதற்கே!
அதனால்
நீ முள்ளாகவே
இருக்கக் கற்றுக்கொள் ….

பெண்ணை
நிலவென்று சொன்னது போதும்
இனிமேல்
சூரியன் என்று போற்றுவோம்….
ஏனெனில் ?
“உலகத்தின் மூலம்”
அவளே என்பதால்…..

பெண்களுக்காக
உரிமைகளை
விட்டுக் கொடுக்காமல் போனாலும் அவர்களுடைய
உரிமைகளை
பறிக்காமல் இருப்போம்……

பெண்களை
மகாராணி போல் நடத்தாமல் போனாலும்…..
அடிமைகளாக நடத்தாமல் இருப்போம்…..!

பெண்களை
சிரிக்க வைத்து
பார்க்காமல் போனாலும்
அழவைத்து
பார்க்காமல் இருப்போம்….!

பெண்களை கடவுளாக
பார்க்காமல் போனாலும்
காமப் பொருளாக
பார்க்காமல் இருப்போம்….!

மகளிர் தினத்தை
சிறப்பாக
கொண்டாடுவது போல்
இனிமேல்
மகளிரையும் கொண்டாடுவோம்….!

மகளிர் தின நல்வாழ்த்துக்கள் _*கவிதை ரசிகன்_*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *