இந்திய சீனப் பொருட்களுக்கு 500 வீத வரிவிதிக்கத் திட்டமிடும் அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கும் அமெரிக்க செனட் மசோதாவுக்கு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை வலுவாக ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் தெரிவித்துள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவரும் புதிய முயற்சி ஆகும். இது மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “நீங்கள் ரஷ்யாவிடம் இருந்து பொருட்கள் வாங்கி, ஆனால் உக்ரைனுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் இருந்தால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை நோக்கம். இந்த தடைகளை கொண்ட மசோதாவுக்கு தற்போது 84 செனட் உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். எனவே, இது நிறைவேறும் என நம்புகிறேன்” என்றும் கூறினார்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, 2025 மே மாதம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்கும் அளவில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. குறிப்பாக அந்த மாதத்தில் இந்தியா ரஷ்யாவிலிருந்து சுமார் 4.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
