டெல்லியின் காற்று மேலும் மோசமடைந்ததால் பிராந்தியத்தின் பாடசாலைகள் எல்லை வரையறையின்றி மூடப்பட்டன!
“வீடுகளிலிருந்து தொழில் செய்யுங்கள், அவசியமற்ற பாரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது,” என்பதைத் தவிர பாடசாலைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. காரணம், உலகிலேயே மோசமான காற்றைக் கொண்டிருக்கும் டெல்லியின் காற்றிலிருக்கும் நச்சுத்துகள்கள் தொடர்ந்தும் அதிகமாகி வருகின்றன.
வருடாவருடம் குளிர்காலத்தில் 20 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியின் காற்றின் தரம் மோசமடைவது வழக்கம். அதன் முக்கிய காரணங்களில் ஒன்று அங்கே போக்குவரத்திலிருக்கும் வாகனங்கள் வெளியிடும் நச்சுவாயுவாகும். டெல்லியின் எல்லையிலிருக்கும் ஹரியானா, உத்தர் பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தின் விவசாயிகள் தமது வயல்களிலிருக்கும் குப்பைகளை எரித்து மீண்டும் விதைப்பதற்குத் தயார் செய்தல். அவர்களால் எரிக்கப்படும் 35 மில்லியன் தானியக்குப்பைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்பொருட்கள் டெல்லியை நோக்கி வீசும் காற்றினால் உள்ளே நுழைகின்றன.
அவற்றைத் தவிர அளவுக்கதிகமான மக்கள் தொகை, தீபாவளி சமயத்தில் மக்களின் கொண்டாட்டத்தால் ஏற்படும் நச்சு வாயு வெளியேற்றம், காற்று அழுத்தத்தால் டெல்லிக்குள் இருக்கும் நச்சு வாயுகள் தொடர்ந்து வெளியே பறக்காமல் கீழ் நோக்கி விழுகின்றன. அத்துடன் டெல்லியினுள் கட்டப்பட்டு வரும் கட்டட வேலைகளிலிருந்தும் கணிசமான அளவு நச்சு வாயு வெளியேறுகிறது.
வழக்கத்தை விட இவ்வருடம் நச்சுக்காற்று சுமார் ஒரு மாதமாகவே அதிகமாக இருக்கிறது. எனவே, தானியக்குப்பை எரித்தலை குறையுங்கள் என்ற வேண்டுதல் பக்கத்து மாநிலங்களிடம் விடப்பட்டன, தீபாவளிப் பட்டாசுகள் விற்க, வெடிக்கத் தடை போடப்பட்டது. எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குகளானதுடன் “டெல்லியின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?” என்பது அரசியல் வாய்ச்சண்டையாகவும் மாறியிருக்கிறது.
கடந்த வாரமே டெல்லியில் பாடசாலைகள் மூடுதல், கட்டட வேலைகள் நிறுத்தப்படல், போக்குவரத்து தடை, வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டுப் பொது முடக்க நிலை ஒரு வாரத்துக்குப் போடப்பட்டது. டெல்லியைச் சுற்றிவர இருக்கும் நிலக்கரியால் இயங்கும் ஐந்து மின்சார மையங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஆனால், காற்றில் நச்சுத்தன்மை மேலும் மோசமாகவே பொது முடக்க நிலை தற்போது காலவரையின்றி நீடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முகில் போர்வை போல நகரை நச்சுக் காற்று ஆக்கிரமித்திருக்கிறது. எனவே போடப்பட்ட தடைகள் தவிர, ஆங்காங்கே அந்தப் புகை மூட்டத்தைக் கலைக்கும் இயந்திரங்கள் நீரைச் சீறியடிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லிக் காற்றிலிருக்கும் நச்சுத்தன்மை, உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பினால் வரையறுக்கபட்ட அளவைவிட 30 தடவை மேலதிகமானதாக இருப்பதாக அளவைகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்