பிரான்ஸின் பிரதமருக்குத் தொற்று, பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில்!
11 வயது மகளுக்கே முதலில் பீடிப்பு.
பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ(Jean Castex) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக அவர் தன்னைத்தனிமைப்படுத்தி உள்ளார். அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த அமைச்சர்கள் பத்துப் பேர் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
முதலில் பதினொரு வயதுடைய தனது மகளுக்குத் தொற்று உறுதியானதைஅடுத்து உடனடியாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் பிரதமர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கும் தொற்று இருப்பதுஉறுதிப்படுத்தப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது.சுகாதார விதிகளின் படி அவர் பத்துநாட்கள் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்படவுள்ளார். பிரதமர் இதற்கு முன்னர் சில தடவைகள் தொற்றாளர்களோடு தொடர்பு கொண்டிருந்த காரணத்துக்காகத் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். எனினும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியிருந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகப் பிரதமர் நேற்றுக்காலை பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தார். பிரெசெல்ஸ் நகரில் பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவையும் (Alexander De Croo) அவர் சந்தித்திருந்தார்.
ஜீன் காஸ்ரோவுக்குத் தொற்று உறுதியானதை அடுத்து பெல்ஜியம் பிரதமரும்அவரது அரசாங்கத்தின் அமைச்சர்கள்சிலரும் முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் எனச் செய்தி வெளியாகியுள்ளது.
பாரிஸில் அரசாங்க அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களைநடத்தி இருந்தார். அதன் பிறகு மகளுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர் நேற்று மாலை முக்கிய கூட்டங்களில் வீடியோ மூலமாகவே பங்குபற்றியிருந்தார்.
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய குவாத்தலூப்(Guadeloupe) தீவில் கட்டுப்படுத்த முடியாதஅளவுக்கு வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றன. அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்குடன் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் பிரதமர் நேற்று மாலைவீடியோ வழியாகப் பேச்சுக்களை நடத்தினார்.
குவாத்தலூப் தீவில் தடுப்பூசி, சுகாதாரப் பாஸ் என்பவற்றுக்கு எதிராக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறைக் கும்பல்கள் ஊடுருவிப் பெரும் கலகங்களில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பெருமளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில தினங்களாக அங்கு இரவுநேர ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுவருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.