ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் ஆன்மீகத் தலைவர் உலக நாடுகளிடம் உதவி கேட்டார்.
வரவிருக்கும் குளிர்காலம் ஆப்கானிஸ்தான் படுமோசமான பசி, பட்டினியை எதிர்நோக்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தமது நாட்டுக்கு உதவும்படி சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் தலைவர் முல்லா ஹசன் அக்குண்ந். முதல் தடவையாக தலிபான்கள் ஆட்சியேறிய பின்பு அக்குண்ந் ஒரு தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றியிருக்கிறார்.
“நாங்கள் பிரச்சினைகளுக்குள் மூழ்கியிருக்கிறோம். எங்கள் நாட்டு மக்களின் நலனுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் ஈடுபட்டிருக்கிறோம். உலக நாடுகள் எவற்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலும் நாம் தலையிடமாட்டோம் என்று உறுதியாக இருக்கிறோம்,” என்று தனது முப்பது நிமிடப் பேச்சின்போது அக்குண்ந் குறிப்பிட்டதாகப் பல செய்தித்தளங்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் விழும்வரை நாட்டின் பொருளாதாரத்தின் 75 % வெளிநாட்டு உதவிகளின் மூலமே செயற்பட்டு வந்தது. தற்போதைய நிலைமையில் தலிபான்களின் கையில் ஆப்கானிஸ்தான் அரசின் நிதியும் இல்லாமல் அவை வெளிநாட்டு வங்கிகளால் தடுக்கப்பட்டுவிட்டன.
வெளிநாட்டு உதவி அமைப்புக்களைத் தனது நாட்டு மக்களுக்கு உதவ வரும்படியும் அக்குண்ந் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தாம் பெண்களுக்கான கல்வி ஆப்கான்ஸ்தானில் மீண்டும் அனுமதித்து அதை இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இணங்க மேம்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு உதவியும் ஆப்கானிஸ்தானுக்குக் கிடைப்பதானால் அது “குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு” உட்பட்டே வழங்கப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பாவின் பக்கமிருந்தும் தலிபான்களுக்கான உதவிகள் வழங்கும் எண்ணமில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்