யசீதியர்களை இன அழிப்புச் செய்ததாக ஜிகாதி ஒருவனுக்கு முதல் தடவையாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை.
ஐக்கிய நாடுகள் சபையினால் யசீதியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டாலும், இதுவரை எவருமே அதற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. எனவே, ஜேர்மனியில் அக்குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை இதேபோன்ற பல தீவிரவாதிகளைத் தண்டிக்க வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நீதிமன்றம், “தஹா அல்-ஜுமாய்லி இன அழிப்புக் கொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்தவன்,” என்று தீர்ப்பளித்தது உலகெங்கும் வாழும் யசீதியர்களால் வரவேற்கப்படுகிறது.
தஹா அல் – ஜுமாய்லியும் அவனது மனைவியும் ஈராக்கில் ஒரு யசீதியத் தாயையும், அவளது 5 வயது மகளையும் விலைக்கு வாங்கினார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேர்த்தார்கள். அவர்களைத் தமது அடிமைகளாக வைத்துத் துன்புறுத்தி வேலைவாங்கினார்கள். ஒரு கட்டத்தில் சிறுமி நோய்வாய்ப்பட்டாள். அச்சமயத்தில் தூக்கத்தில் சிறு நீர் கழித்தாள். அவளுக்குத் தண்டனையாக அவளைச் சங்கிலியில் கட்டி 45 செல்ஸியல் அளவு வெம்மைக்காலத்தில் சூரியனுக்குக் கீழே நிற்கவைத்தார்கள். அங்கேயே அச்சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்தாள்.
தஹா அல் – ஜுமாய்லி 2019 இல் கிரீஸ் சென்று அங்கே அகதியாகப் பதிவுசெய்துகொள்ள முயன்றான். ஏற்கனவே சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த அவனை அடையாளங் கண்ட கிரீஸ் பொலீஸ் ஜேர்மனியுடன் தொடர்புகொண்டது. அதையடுத்து, ஜேர்மனியின் கோரிக்கையின் பேரில் அவனை ஜேர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.
தஹா அல் – ஜுமாய்லியின் மனைவி ஜென்னிபரும் சேர்ந்துதான் அந்தக் குற்றங்களைச் செய்திருந்தார்கள். குழந்தை இறந்த சில நாட்களில் ஜென்னிபர் அங்காராவிலிருக்கும் ஜேர்மனியத் தூதுவராலயத்தில் தனது நாட்டுக்குத் திரும்புவதற்கான பத்திரங்களைப் பெற வந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டு, ஜேர்மனிக்குக் கொண்டுவரப்பட்டு, கைது செய்யப்பட்டாள். ஜென்னிபர் மீது தனியாக விசாரணை நடாத்தப்பட்டு வருகிறது. அவள் மியூனிச் நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கிறாள். தஹாவும் 2013 ல் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கும் போரில் ஈடுபடச் சேர்ந்துகொண்டவன். ஜென்னிபர் அதற்கடுத்த வருடத்தில் ஈராக் சென்று அவனைப் 2015 இல் திருமணம் செய்துகொண்டாள்.
சாள்ஸ் ஜெ. போமன்