கவிநடை

கிழவன்…!

காலதச்சன் வயதால் செதுக்கிய கிழவனொருவனை கைத்தடி இழுத்துத் திரிகிறது…!

கண் இமையருகே கைகுவித்து உலகம் காண்கிறது அவன் கூர் பார்வை…!

வெற்றிலை குதப்பிய வாயில் செம்பூக்களாய் இன்னும் விழாத சில பற்கள்…!

பாதரட்சை கண்டிராத அவன் பாதங்கள் வழி முட்களை கொன்று கடக்கிறது…!

நடை தளர்ந்தாலும் தளராத குரல்…!

மொழிப்போரும் அரிசி பஞ்சகாலமும் நிகழ்வின் பிரதியெடுத்து தருகிறான்…!

வாழ்க்கை பயிற்றுவித்த வலிகளை விளம்பிச் செல்கிறான்…!

கேட்பாரில்லை…

உடன் வாழ்ந்தோரெல்லாம் விடைவாங்கிப் போக தனியொருவனாய் நடை தவழ்கிறான்…!
***** ***** *****

எழுதுவது : லியோ திருவரம்பு