உனக்குள் இருக்கு சக்தி…

படிச்சி படிச்சி வச்சதெல்லாம்
மனசில் நிக்க வேணும்!- உன்
மனசில் நிக்க வேணும்!
பாட மாக காண்பதெல்லாம்
மனதில் கொள்ள வேணும்!- நீ
மனதில் கொள்ள வேணும்!

வந்தோம் போனோம் என்பதெல்லாம்
வாழ்க்கை இல்லை தம்பி!- அது
வாழ்க்கை இல்லை தம்பி!
நாளை உலகம் உன்னையும்
படிக்க வேணும் தம்பி!- அதுக்கு
உழைக்க வேணும் தம்பி!

காந்தியும் நேருவும் உன்னைப்போல்
மனுஷ பிறப்பு தானே!- நீயும்
காந்தி நேரு தானே!
நம்மால் முடியும் என்றெண்ண
வெற்றி யுண்டு தானே!- உனக்கு
வெற்றி யுண்டு தானே!

முயற்சி முயற்சி என்றானால்
எதிலும் வெற்றி தானே!- உனக்கு
எதிலும் வெற்றி தானே!
உனக்குள் இருக்கும் சக்தியினை
உணர வேண்டும் நீயே!- அதனால்
உயர வேண்டும் நீயே!

நாளை யுலக வரலாற்றில்
உன்னைப் படிக்க வேணும்!- உலகம்
உன்னைப் படிக்க வேணும்!
வாழும் போதே வரலாறாய்
நீயே மாற வேணும்!- உலகை
நீயே மாற்ற வேணும்!

எழுதுவது : பாரதிசுகுமாரன்