புகையடுப்புகள்

நீதி சட்டத்திற்கு விருந்து வைத்து
உபசரிப்பவர்களே கோபம் வேண்டாம்.!

அநீதி சட்டத்திற்கு கோபுரம் கட்டி
அபிஷேகம் செய்பவர்களை சாடவே
வந்தேன்.!

சட்டத்தை வடிவமைத்தவரின்
சரித்திரங்கள் சாற்றுகின்றன _
மதவாத சொறிகளின் சேட்டையால்,
நாற்காலி நரிகளின் வேட்டையால்
பதவியைத் துறந்து ,
மதத்தை துறந்து
புத்த ஆகாயத்தில் கலந்து போனாரென..

சிதைக்கப்பட்ட நீதி பிதாவை போல்
சிதைக்கப்படுகின்றன நீதிகள்..!

அமில சட்டத்தை
ஏழையின் முகத்தில் வீசியும் _
அமுத சட்டத்தை
பணக்காரனின் வாயில் ஊட்டியும்
கும்மாளமிடுகின்றார்கள் நீதி கயவர்கள்..!

சட்ட எரிபொருளை உற்றி
நீதி தேவதையை தினமும்
தீக்குளிக்க வைக்கின்றார்கள்.!

அதிகார பணங்களின் அரிப்புக்கு
சொறிந்து விடுகின்றன
செல்லரித்த சட்டங்கள்..!

அதிகாரத்திற்கும்,
அரசியலுக்கும் எதிராக
நீதி சொன்னால்
பந்தாடபடுவதால் _ நீதியை
பந்தாடி விடுகின்றார்கள் நீதியரசர்கள்..!

ஜனநாயக முகமூடிக்கு
ஒப்பனை செய்து சிரிக்கின்றன
பல்லிளிக்கும் நீதிகள்..!

பெரும் போதை கடத்தல் ,
பெரும் ஊழல் அடித்தல் ,
கொலைகள் ,
சிறார் வன்கொடுமைகள் ,
கற்பழிப்புகள் ,
வன்முறைகள்,
சமூக விரோத செயல்கள்
ஜாமீன் சிறகை விரித்துப் பறந்து
மாய்ந்து போவதால் _
நீதியை புதைத்து அழித்து,
குற்றங்களை விதைத்து வளர்த்து
கொக்கரிக்கிறார்கள் புகையடுப்புகள்.!

உண்மை வெளிச்சத்தால்
குற்றவாளியாக தீர்பிடபட்டவர்களை
மேல்முறையீடு செய்தும்,
மேல் நீதிமன்றங்கள் சென்றும் _தன்
சூதக வாத திறமையாலும்,
ஓட்டை சட்டங்களை கிழித்தும்
பொய் சாட்சிகளை புனைத்தும்
பண பொட்டிகளில் புழங்கியும்
நிரபராதியாக்கி
மார்புத் தட்டிக்கொள்ளும் பெருச்சாளிகள்..!

நட்சத்திரங்களின் குற்றங்களை
நடுக் கடலில் புதைத்து விட்டு
கைகுலுக்கிக் கொள்ளும் கருங்காலிகள்..!

அழுக்கு சட்ட நெய்யால் தீபமேற்றி
அதிகார ஆசாமிகளுக்கு தூபம் காட்டும்
துருப்பிடித்த துலாபாரங்கள்.!

சண்டாளனை சால்வை போர்த்தி வரவேற்றும் ,
சாமானியனை சதி செய்து
சிறையில் அடைத்தும்
தன் கடமையை செய்யும் சட்டத்தின் சறுக்குகள்.!

சட்டத்தை படித்துவிட்டால்
சகலத்தையும் படைத்தவரென
சில்லறை பார்வையை வீசுகின்றார்கள்
சட்டத்தின் மணமறியாத மூக்கடைப்புகள்.!

வழக்கறிஞர்கள் வழக்கறையர்களாகி
வாய்தா தொடர் ஓட்டி
வயிற்றை உப்பி கொள்கின்றார்கள்..!

நீதி குற்றங்களின் குடைச்சல் தாங்காமல்
தற்கொலை செய்திடவும் முடியாமல்
பிரம்மை பிடித்து கிடக்கின்றன நீதிமன்றங்கள்.!

பண எண்ணெயின் வழக்குகள்
வழுக்கி போகின்றன.!
ஏழை மண்டியின் வழக்குகள்
தேங்கிக் கிடக்கின்றன..!

சட்டமெனும் சந்தன படகை
சாக்கடை கடலில் மூழ்கடித்து விட்டு
கரையேறி போகின்றன
கறுப்பு ஆடுகள்.!

சட்டத்தின் சங்கை அறுத்து விட்டு
ரத்தம் குடிக்கின்றன
கரும் காட்டேரிகள்..!

சட்ட சிலந்தி வலையை
மேல் வர்க்க சிங்கங்கள்
கிழித்து தப்பிவிட செய்தும் _
கீழ்வர்க்க பூச்சிகளை
சிக்கி மாட்டிவிட செய்தும்
சிலாகிக்கும் நரகவாசிகள்..!

எதிர்த்தரப்பு வக்கீலோடு
ரகசிய ஒப்பந்தமிட்டு _
தன் தரப்புகாரனின் கோமணத்தை உருவி
கோட்டை கட்டும் கிரகபாசிகள்..!

ஓட்டை சட்ட சட்டியில்
ஒழுகுகின்ற நீரில்
தேகம் குளிர குளிக்கும்
பாதாள குழிகள்..!

மேல் குடிக்கு
ஆக்சிஜனால் வாழ்வளித்தும் _
கீழ் குடிக்கு
கார்பனால் வாழ்வையழித்தும்
சட்ட சமத்துவ காற்று
இருமுகம் காட்டி உறுமும்
வேதாள ஒலிகள்.!

ஆளும்கட்சியின் கறுப்பு ஆடுகளை
அரசு ஆடுகளாக அறிவித்தும் ,
பதவி உயர்வு மேடுமளித்தும்
அடிமையாக்கி விட்டு _
நீதியணையை உடைத்து விடுகின்றார்.!

இறையாண்மை சட்டத்தை
கரையான்கள் அரித்ததால்
கறுப்பு பிசாசுகளின் ஊளைக்கு பயந்து
மக்கள் பதறி ஓடுகிறார்கள் ஒருபுறம்..!

அரசியல் அசுரர்களின்
வேட்டைக்கு பலியாகி
” நீதிபதிகள் இருப்பார்கள்
நீதிமன்றங்கள் இருக்காது ” என
நீதியரசர்கள் முழங்குகிறார்கள் மறுபுறம்..!

” சட்டம் அனைவருக்கும் சமம் “
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது
எனும் வடிவேலின் நகைச்சுவை
ஓயாமல் எதிரொலிக்குது.!!!

எழுதுவது : கவிஞர் விஜய் சேசுலா.