உலகின் முதலாவது நாடாக நாலரை நாட்கள் வேலை நேரம் எமிரேட்ஸில் அமுலுக்கு வருகிறது.
பல வருடங்களாகவே எமிரேட்ஸ் அரசு தனது தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை மேற்கு நாடுகளுக்கு இணையாக மாற்றுவது பற்றிக் குறிப்பிட்டு வந்தது. அந்த நகர்வு 2022 முதல் எமிரேட்ஸ் அரசின் ஊழியர்களுக்கு வாரத்தில் நாலரை நாட்கள் என்ற சட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜனவரி முதலாம் திகதி முதல் எமிரேட்ஸ் அரச ஊழியர்கள் திங்கள் முதல் வெள்ளியன்று மதியம் 12 மணிவரை வேலை செய்வார்கள். அதன் பின்பு வெள்ளி மாலை முதல் ஞாயிறுவரை அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலிருக்கும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விக்கூடங்களும் அந்த மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று எமிரேட்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.
1971 -1999 வரை எமிரேட்ஸில் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமான விடுமுறை நாளாக்கப்பட்டது. 1999 இல் வியாழக்கிழமையும் விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டது. 2006 முதல் வியாழன், வெள்ளி இரண்டும் விடுமுறை நாளாக்கப்பட்டன.
நாட்டின் புதிய தொழில் நேரத்துக்கு அமையக்கூடியதாக வெள்ளியன்று தொழுகை நேரமானது வருடம் முழுவதும் 13.15 ஆக மாற்றப்பட்டிருக்கிறது.
“நாட்டு மக்களின் நலத்தையும், சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டே புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சர்வதேச பொருளாதார நதியில் எங்கள் நாட்டையும் இணைப்பதற்கு வசதியாகவும், சர்வதேச நிறுவனங்களை எமிரேட்ஸில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காவும் கூட புதிய மாற்றங்கள் பயன்படும்,” என்று எமிரேட்ஸ் அரசு தனது முற்போக்கு நோக்குக்கு விளக்கம் கொடுத்திருக்கிறது.
எமிரேட்ஸ் சட்டப்படி தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கொடுக்கவேண்டும். புதிய மாற்றங்களுக்கு ஏற்றபடி அவர்களுடைய வேலை நேரங்களையும் மாற்றலாம் என்று அரசு தனியாரிடம் கேட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்