நெஞ்சுறுதி கொண்டே நிமிர்!
பாவரசு குரல்…
தடைகளை எல்லாம் தகர்த்தே எறியும்
படையென மாறு படர்ந்து!
திண்ணிய நெஞ்சும் திடமிகு சிந்தனையும்
உண்டெனில் காண்பாய் உயர்வு!
சிதைந்து மடிந்திடினும் செந்தமிழே சிந்தை
புதைந்திருக்கும் என்றே புகர்!
ஒன்றே இலக்கு! உயர்வேதான் நோக்கமென
எண்ணுக! நீங்கும் இடர்!
அஞ்சாமை உன்னுடைமை! ஆற்றலும் உன்சொந்தம்!
நெஞ்சுறுதி கொண்டே நிமிர்!
அச்சம் தவிர்ப்பாய்! அடிமைத் தனமறுப்பாய்!
உச்சத்தை எட்டி உயர்ந்து!
வீரரெனில் வீழ்த்திடவே வீணர்கள் எண்ணுவர்!
தீரர்க்கோ உண்டு திடம்!
முரசுகள் கொட்டி முழங்குமுன் பேரை!
உரம்கொண்டே வாழ்க உயர்ந்து!
மாற்றார் வலிக்கு மருந்தென ஆவதால்
போற்றலுடன் காண்பாய் புகழ்!
அங்கம் சிதைந்திடினும்
அன்னைத் தமிழுக்கோர் பங்கமெனில்
செய்திடுவோம் பாழ்!
எழுதுவது : பாவரசு