குஞ்ஞுண்ணி கவிதைகள்
‘கு’ கடந்தால் ‘ஞ்ஞு’
‘ஞ்ஞு’ கடந்தால் ‘ண்ணி’
‘ண்ணி’ கடந்தால் குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணி கடந்தால்.
♦
நானொரு பூவிலிருக்கிறேன்
இன்னொரு பூவின்
தேனையருந்தத் தவிக்கிறேன்.
♦
என் முதுகிலொரு யானை
என் நாக்கிலொரு ஆட்டுக்குட்டி
நானொரு எறும்பின் குட்டி.
♦
நான்
நானென்ற சொல்லின்
இடையிலிருக்கவா
பக்கத்திலிருக்கவா
முன்னாலிருக்கவா
பின்னாலிருக்கவா
மேலேயிருக்கவா
கீழேயிருக்கவா
எள்ளில் எண்ணெய் போலிருக்கவா
நானென்ற சொல்லாயிருக்க
♦
எனக்கு நான்
கொஞ்சமும் உதவுவதில்லை
அதை இப்படி விளக்கலாம்
ஒரு கையில் அரிப்பெடுத்தால்
அதே கையால்
சொறிய முடியாதல்லவா
♦
நான் இனி
என்னுடைய அப்பனாவேன்
பிறகு அம்மையாவேன்
பிறகு மகளும் மகனுமாவேன்
பிறகு
நானென்ற நானாவேன்
♦
உயரமில்லாததே
எனது உயரம் என்பதை நானறிவேன்
♦
நானெ்ற குஞ்ஞுண்ணியா
குஞ்ஞுண்ணி என்ற நானா
♦
அரண்மனையை காக்கும்
நாயல்லலவா நான்
உனது முகவரியைக்
கேட்கட்டுமா நாயே.
♦
நான் யாருடைய நினைவு.
♦
என்னைப் பெற்றது நான்தான்.
♦
பெண்ணின் இடையைப் பார்க்காததால்
நான் ஒரு கால் கவிஞன்
பார்த்திருந்தால்
அரைக் கவிஞன் ஆகியிருப்பேனா
அல்லது
அரைக்கால் கவிஞன் ஆகியிருப்னோ~~
எழுதுவது :
மலையாளம் குஞ்ஞுண்ணி மாஷ் தமிழ் ராஜன் ஆத்தியப்பன்