போரிஸ் ஜோன்சனுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது மூக்குடைப்பு.

இவ்வார ஆரம்பத்தில் ஐக்கிய ராச்சியத்தில் பல சேவைகளுக்கும் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பாவிப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஆனால், எதிர்க்கட்சியினரின் ஆதரவினால். வாரத்தின் நடுப்பகுதியில் நடந்த பிராந்தியத் தேர்தலில் ஜோன்சனின் கொன்சர்வடிவ் கட்சியினர் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

சமீப வாரங்களில் ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது பல கோணங்களிலிருந்தும், வெவ்வேறு காரணங்களுக்காகக் கடுமையான விமர்சனக்கணைகள் வீசப்பட்டு வருகின்றன. விமர்சனங்களுக்கு ஜோன்சன் ஒன்றும் புதியவரில்லாவிடினும், கட்சிக்கு உள்ளேயிருந்து அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்கள் பலமாகி வருகின்றன என்பது வித்தியாசமானது.

கொவிட் 19 சான்றிதழைப் பாவனைக்குக் கொண்டுவரப்படுவதற்காகப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் மீது அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் கால் பங்கினர் கட்சிப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது ஜோன்சன் மீது குறிவைத்து எறியப்பட்ட எதிர்ப்புக்கணைகளாகவே பார்க்கப்படுகிறது.

அதையடுத்து கொன்சர்வடிவ் கட்சியினரின் பலமான கோட்டை என்று கருதப்படும் பிராந்தியமான வடக்கு ஷ்ரோப்ஷயர் பகுதியில் கட்சி தனது இடத்தை லிபரல் டெமொகிரசிக் கட்சியினரிடம் தோற்றுப் போயிருக்கிறது. ஒன்றிரண்டல்ல 200 வருடங்களாக கொன்சர்வடிவ் கட்சியின் பலமான கோட்டையாக இருந்த பிராந்தியம் அதுவாகும்.

வடக்கு ஷ்ரோப்ஷயரின் பா.உ-வாக இருந்த ஓவன் பட்டர்சன் தனக்குத் தனிப்பட்ட தொடர்புகளிருந்த விடயத்தில் உத்தியோகபூர்வமாக முடிவு எடுத்ததால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இப்போதைய தேர்தலில் கொன்சர்வடிவ் கட்சி அங்கே துரும்பளவிலல்ல, 6,000 வாக்குகளால் தோற்றுப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நத்தார் சமயத்தில் நாட்டில் நிலவிய கொவிட் கட்டுப்பாடுகளை மீறி ஜோன்சன், தனது சகாக்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, ஜோன்சனின் வீட்டைத் திருத்துவதில் அரச பணம் செலவிடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்குத் தெளிவான பதிலில்லாமை ஆகியவை சமீப காலத்தில் கொன்சர்வடிவ் கட்சி, போரிஸ் ஜோன்சன் ஆகியோர் மீதான விமர்சனங்களுக்குக் காரணமானவையாகும்.

வடக்கு ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெற்றிபெற்ற ஹெலன் மோர்கன் தனது நன்றி நவிலலியேயே ஜோன்சனுக்குச் செய்தியனுப்பினார், “போரிஸ் ஜோன்சன், கொண்டாட்டம் முடிந்துவிட்டது!”

சாள்ஸ் ஜெ. போமன்