புதுவருடம் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களுக்கு வெளிநாட்டு உதவியை வெட்டியெறிந்தது.
சனிக்கிழமையன்று 2022 ம் ஆண்டு பிறந்தபோது வெளிநாட்டிலிருந்து உதவிப்பணம் பெறும் இந்திய அமைப்புக்களின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆல் குறைந்தது. 22,762 என்ற எண்ணிக்கை 16,829 ஆக மாறியிருக்கிறது.
ஐ.ஐ.டி டெல்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திரா காந்தி கலை வளர்ச்சி மையம், நேரு தேசிய அருங்காட்சியகமும் வாசிகசாலையும், லால் பஹதூர் சாஸ்திரி ஞாபகார்த்த மையம், லால் சிறீராம் பெண்கள் கல்லூரி, ஒக்ஸ்பாம் இந்தியா, மஹரிஷி ஆயுர்வேதா பிரதிஷ்டன், மீனவர்களுக்கான தேசிய கூட்டுறவு அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவை இனிமேல் வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதை இழந்திருக்கும் பெயர்சொல்லக்கூடிய முக்கிய அமைப்புக்களில் சிலவாகும்.
தமது செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுவரும் அமைப்புக்கள் பலவும் இந்தியாவின் தேசிய நலனுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்று மோடி அரசு பதவிக்கு வந்த காலத்திலிருந்தே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தன. அவைகளுக்கான நிதி வெளிநாடுகளிலிருந்து வருவதை வெட்டிவிடுவதன் மூலம் அவைகளைச் செயலிழக்க வைப்பது கடந்த வருடங்களில் படிப்படியாகச் செய்யப்பட்டு வந்த திட்டமாகும்.
இதன் விளைவால் மனிதாபிமான உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டி உட்பட பெயர்பெற்ற அமைப்புக்கள் பலவின் சிறகுகளையும் இந்தியாவின் உள்துறை அமைச்சு வெட்டியெறிந்திருக்கிறது. அவற்றின் உச்சக்கட்டமே மேலும் சுமார் 6,000 அமைப்புக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையாகும்.
இவைகளில் சுமார் ஒரு டசின் அமைப்புக்களுக்கு மட்டு மார்ச் 31 வரை வெளிநாட்டு உதவிகள் பெறும் அனுமதி தற்காலிகமாக நீடிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கால கட்டத்துக்குள் அவை புதிய விண்ணப்பத்தை முன்வைத்தால் அவை பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.
ஆனாலும், மதக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கான அனுமதிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்