பேச்சுவார்த்தையில் எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா.
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கைகள் வரும் சமயத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன.
உக்ரேன் மீது ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை நிகழ்த்துமானா ரஷ்யா மீது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப விடயங்களில் தடைகள் போடத் தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க – ஐரோப்பிய வட்டாரங்கள் சைகை தெரிவித்திருக்கின்றன.
ரஷ்யாவின் தலைமையோ முக்கியமான பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவுடனேயே நடத்த விரும்புகிறது. ஜெனீவாவில் திங்களன்று ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தைகள் புதனன்று நாட்டோவுடன் பிரசல்ஸில் தொடரும். அதையடுத்து வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அமைப்புடன் வியன்னாவில் ரஷ்யப் பிரதிநிதிகள் சந்திப்பார்கள்.
உக்ரேனை ரஷ்யா தாக்குமானால் பதிலடியாக வர்த்தகத்தடை, தொழில்நுட்பப் பரிமாறல் தடை ரஷ்யாவுக்கு எதிராக இயங்கும் அமைப்புக்களுக்கு ஆயுதம் கொடுத்தல் ஆகியவை அமெரிக்காவின் பட்டியலில் இருக்கின்றன. ரஷ்யாவுக்கு மேற்கு நாடுகளிலிருந்து விற்கப்படும் கைபேசிகள் முதல் வெவ்வேறு வீட்டுப் பாவனை இயந்திரங்கள் வரை சகலவிதமான பொருட்களுக்கும் தடை விதிக்க அமெரிக்கா தயார். உக்ரேனியப் போராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலம் ரஷ்யாவுக்கெதிரான உள்நாட்டுப் போர்களை உருவாகவும் எண்ணங்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்