கொவிட் 19 கையாளுதலை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுகிறது டென்மார்க், தொற்றுக்கள் மிக அதிகமாகும்போதும்.
டென்மார்க்கில் கொரோனாத் தொற்றியவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவு உச்சத்தைத் தொடுகிறது. 17 ம் திகதி மட்டும் 29,000 புதிய தொற்றுக்கள் பதியப்பட்டன. ஆனால் அவ்வியாதியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 மட்டுமே என்பது அவ்வியாதியைப் பெரும்தொற்றாகக் கருதும் நிலைப்பாட்டை மாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது என்கிறார் பிரதமர் மெத்தெ பிரடரிக்சன்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 என்பது டிசம்பருக்குப் பின்னர் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். டென்மார்க்கில் சமீப வாரங்களில் தினசரி தொற்றுக்கள் பல்லாயிரக்கணக்காக இருந்து வருகின்றன. உலகில் அதிக விகிதமான தொற்றுக்கள் என்பதையும் சந்தித்தும் டென்மார்க் அரசின் தொற்றுநோய்ப் பரவல் சேவையினர் அக்கொடும் வியாதியின் பலமான பாதிப்புக் காலம் கடந்துவிட்டது என்றே கணித்து வருகிறார்கள்.
கடந்த வருடம் கொரோனாத்தொற்றுக் காலத்தில் நாட்டையே மூடி, சமூகத்தில் பொது முடக்கங்களை கண்ட டென்மார்க் சமீப காலத்தில் மிகவும் சில கொரோனாக் கட்டுப்பாடுகளை மட்டுமே போட்டிருக்கிறது. தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் மருத்துவத் தேவையை நாடுபவர்கள் வேகமாகக் குறைந்து வருவதால் பொதுமக்களின் பக்கமிருந்தும் மிச்சமிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கச்சொல்லிக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
நாட்டின் தொற்றுநோய்ப்பரவல் விற்பன்னர்களின் ஆலோசனைகளுக்கும், கொரோனாக் கட்டுப்பாடுகளால் அலுத்துப்போன மக்களின் குரல்களுக்கும் டென்மார்க்கின் பிரதமர் செவிசாய்த்திருக்கிறார். எனவே, தான் கட்டுப்பாடுகளை நீக்குவது மட்டுமன்றி கொவிட் 19 ஐ எப்படிக் கையாள்வது என்பதையும் மாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்