மைண்ட்புல்னஸ் என்ற வாழ்க்கைக் கலையைப் பற்றி மேற்குலகுக்குக் கற்பித்த திக் நியத் ஹாங் மறைந்தார்!
புத்தபெருமானின் போதனைகளை மேற்குலகில் பிரபலமாக்கியவர்களில் அதிமுக்கியமானவர்களில் ஒருவர் திக் நியத் ஹாங் [Thich Nhat Hanh] என்ற வியட்நாம் துறவி. மைண்ட்புல்னஸ் [mindfulness] என்று குறிப்பிடப்படும் வாழ்க்கை நேரிடுவது எப்படி என்ற கலையைப் பற்றிக் கற்பித்தவர் அவராகும்.
உலகெங்கும் சமீப வருடங்களில் மனித குலத்திடையே மிகப்பெரும் ஆரோக்கியக் குறையாகக் குறிப்பிடப்படும் மன அழுத்தம், ஆழ்ந்த கவலை ஆகியவற்றை எப்படிக் கையாளவேண்டும் என்பதுபற்றி மைண்ட்புல்னஸ் கோட்பாடு விபரிக்கிறது. அதை வெறும் போதனையாக மட்டும் இல்லாமல் தினசரி வாழ்நாளில் எப்படிக் கடைப்பிடிப்பது என்பதைப் படிப்படியாக விளக்கினார். “நிகழ்காலத்தில் வாழ்வது,” எப்படி என்பதற்கான வழிவகைகளை மைண்ட்புல்னஸ் விபரிக்கிறது.
“மெல்லிய பஞ்சாலான தலையணையில் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தியானம் செய்தால் போதாது,” என்பது திக் நியத் ஹாங்கின் நிலைப்பாடாகும். புத்தரின் வழியில் செயற்படும் மனிதராக வாழவேண்டும் என்று விடாமல் அவர் போதித்து வந்தார். தனது 16 வயதில் துறவியாகிய அவர் வியட்நாம் அரசுக்குப் பிடிக்காதவர். வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் கழித்து வந்தார்.
திக் நியத் ஹாங்கின் போதனைகளைக் கேட்டே 1960 களில் மார்ட்டின் லூதர் கிங் வியட்நாம் போரை நிறுத்தும்படி அமெரிக்க அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
2014 இல் தான் வியட்நாம் அரசு திக் நியத் ஹாங்கை மீண்டும் நாட்டுக்குள் வர அனுமதித்தது. தனது இளம் வயதில் ஆரம்பித்துவைத்த மடத்தில் கடைசிக் காலத்தைச் செலவிட்ட அவர் அங்கு தனது 95 வது வயதில் மறைந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்