நகைத்திருட்டால் பிளவுபட்டிருந்த தாய்லாந்து – சவூதி அரேபிய உறவைப் புதுப்பிக்க முயற்சி.
தாய்லாந்துத் தொழிலாளியொருவரால் செய்யப்பட்ட திருட்டொன்றின் காரணமாக 1989 இல் சவூதி அரேபியா தனது உறவுகளைத் தாய்லாந்திடமிருந்து பெரும்பாலும் வெட்டிக்கொண்டது. அதன் பின்பு முதல் தடவையாக சவூதி அரேபிய இளவரசன் முஹம்மது பின் சல்மானின் வரவேற்பை ஏற்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா அங்கே இரண்டு நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவிருக்கிறார்.
சவூதிய அரசகுமாரனின் மாளிகையில் 1989 வேலைசெய்துவந்த கிரியங்கிராய் தெக்கமுங் என்ற துப்பரவுத் தொழிலாளி அங்கிருந்து 20 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைப் பற்றி விசாரித்த தாய்லாந்து பொலீசார் அவைகளில் ஒரு பங்கு நகைகளை மீட்டெடுத்த்தாகச் சவூதிக்குக் கொடுத்தார்கள். அவைகளில் பெரும்பாலானவை போலிகள் என்று சவூதி அரேபியா குறிப்பிடுகிறது. அத்துடன், “நீல வைரக்கற்களின் மர்ம மறைவு” என்ற பெயரில் அழைக்கப்படும் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் காணாமல் போன மிகப் பெறுமதியான 50 காரட் வைரம் பற்றி இன்னும் எவருக்கும் தெரியவில்லை.
நீல வைரம் எங்கே போனது என்பதைப் பற்றி மறைத்து வைப்பதில் தாய்லாந்தின் ஆட்சியின் உயர்மட்டத்தினருக்குப் பங்கிருப்பதாகச் சவூதி அரேபியா கருதுகிறது. தாய்லாந்திலும் தொடர்ந்து மர்மமாகவே இருந்துவரும் அத்திருட்டில் சம்பந்தப்பட்டதாக ஒரு உயர்மட்டப் பொலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் மீது வழக்குகள் நடந்தன. ஆதாரங்களில்லாமல் அவர்களைத் தண்டிக்க முடியவில்லை.
திருட்டின் ஒரு வருடத்தின் பின்னர் தாய்லாந்தில் மூன்று சவூதிய ராஜதந்திரிகள் வெவ்வேறு இடங்களில் வைத்து ஒரே இரவில் கொல்லப்பட்டனர். சவூதி அரேபிய அரசு அதைப் பற்றித் துப்புத் துலக்க ஒருவரை அனுப்பிவைக்க அந்த நபரும் தாய்லாந்தில் காணமல் போனார்.
அதன் பின்னர் தாய்லாந்துக்கு எந்த ஒரு தூதுவரையும் சவூதி அரேபியா அனுப்பவில்லை. இரண்டு நாடுகளுக்குமிடையே கட்டுப்பாடுகள் பல நிலவிவருகின்றன. சவூதி அரேபியாவுக்குத் தொழிலாளர்களை அனுப்ப முடியாமல், அங்கே வர்த்தகங்கள் செய்ய முடியாமல் தாய்லாந்து பெரும் இழப்பையே பல வருடங்களாக அனுபவித்து வருகிறது.
நிலைமையைச் சீர்செய்து நல்லுறவை ஏற்படுத்தக் கால் நூற்றாண்டுக்கும் மேலாக முயன்ற பின்னரே தாய்லாந்தின் பிரதமர் அங்கு உத்தியோகபூர்வமான சுற்றுப்பயணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்