இரண்டு ரஷ்யப் பெரும் கோடீஸ்வர குடும்பத்தினரின் இறப்புகள் கேள்விகளை எழுப்புகின்றன.
சமீபத்தில் இறந்துபோன இரண்டு ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரக் குடும்பங்கள் தற்கொலைகளா திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட கொலைகளா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. செர்கேய் புரோட்டசென்யா குடும்பம் ஸ்பெய்னிலும், விளாடிஸ்லாவ் அவலயேவ் குடும்பம் மொஸ்கோவிலும் தத்தம் வீடுகளில் இறந்துபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட இரண்டு பணக்காரர்களும் இதுவரை மேற்குலகின் பொருளாதார முடக்கங்களுக்கு உள்ளாகாதவர்கள், புத்தினுக்கு நெருக்கமானவர்கள்.
55 வயதான செர்கேய் புரோட்டசென்யா ஸ்பெய்னில் தனது விடுமுறைகால வீட்டில் 53 வயதான மனைவியையும், 18 வயதான மகளையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் சுட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதக்கூடியதாக இறப்புகள் காட்டுகின்றன. அதேசமயம் அவர்களெவரின் உடல்களிலும் இரத்தம் சிந்தியிருக்கவில்லை என்பது பொலீசாரைக் குழப்புகிறது. செர்கேய் புரோட்டசென்யா எரிசக்தி நிறுவனங்கள் இரண்டுடன் தொடர்புடையவர், 400 மில்லியன் எவ்ரோ சொத்துக்களுக்கு உடமையாளர்.
மேற்கண்ட இறப்புக்கள் நடந்த அதே சமயம் மொஸ்கோவில் விளாடிஸ்லாவ் அவலயேவ் என்ற 51 வயதான முன்னாள் காஸ்ப்ரோம் வங்கி உயர் நிர்வாகியும் தனது மனைவியையும் மகளையும் தனது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் சுட்டுத் தற்கொலை செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாயின. விளாடிஸ்லாவ் அவலயேவ் ஜனாதிபதி புத்தினின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவராகும். அவரது மனைவி கர்ப்பிணி மகளின் வயதோ 13 ஆகும்.
ஒரே விதமான கேள்விகளை எழுப்பக்கூடிய விதத்தில் இறந்து போன இரண்டு பெரும் பணக்காரக் குடும்பங்கள் திட்டமிட்டே கொல்லப்பட்டனவா என்றும் பொலீசார் யோசித்து வருகிறார்கள். அக்குடும்பங்களும் வேறு குடும்பங்களுக்கும் இடையேயான உள்சண்டையின் விளைவா என்பதும் இன்னொரு கேள்வியாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்