பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.
சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வியாழனன்று இரவு ஜனாதிபதி மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.
சிறீலங்காவின் பிரதமராக ஒருவரை நியமிப்பதுடன் இளமையான ஒரு அமைச்சரவையையும் தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியுடன் நாட்டின் நிலைமையைச் சீர்செய்யத் தான் முடிவெடுத்திருப்பதாகக் கோட்டாபாயா கூறினார். வியாழனன்று டுவீட்டுகளில் தான் சிறீலங்கா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிய விடயங்களில் மாறுதல்களைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கேயுடனும் வேறு சில பாராளுமன்றக் கட்சிகளுடனும் தனிப்பட்ட முறையில் கோட்டாபாயா ஆலோசனைகளில் ஈடுபட்டபின்னர் விக்கிரமசிங்கே பிரதமராக வியாழனன்று மாலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார் என்ற செய்தியும் வெளியிடப்பட்டது.
“புதிய அரசாங்கம் பதவியேற்று நாட்டின் அவசரமான தேவைகள் பற்றிய முடிவுகளை எடுத்த பின்னர் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் செய்யப்படும். அதை அமைதியான முறையில் ஆலோசித்துச் செயற்படுத்த அதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்,” என்கிறார் கோட்டாபாயா.
நாட்டு மக்களை வன்முறைகளைக் கைவிட்டு அமைதியான முறையில், நடக்குமாறும் கோட்டாபாயா கேட்டுக்கொண்டார். ஏற்பட்டிருக்கும் பல பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான விநியோகங்களை செய்ய சட்டம், ஒழுங்கை அனுசரித்து மக்கள் நடப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மீதாக வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மே 17 ம் திகதியன்று பாராளுமன்றத்தின் பிரத்தியேக அனுமதியுடன் விவாதத்துக்கு முன்வைக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்