தடைகளை மேற்கு நாடுகள் அகற்றாவிட்டால் ரஷ்யா தானிய முடக்கங்களை நீக்கமாட்டாது!
ரஷ்ய ஜனாதிபதியை சோச்சி நகரில் சந்தித்திருக்கிறார் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், செனகலின் ஜனாதிபதியுமான மக்கி சல். ஐக்கிய நாடுகளின் சபையில் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்த நாடு செனகல் ஆகும். தமது பிராந்தியத்துக்குத் தேவையான உணவுத்தானியங்களை முடக்குவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளவே அவர் புத்தினைச் சந்தித்திருந்தார். மேற்கு நாடுகள் ரஷ்யாவின் மீது போட்டிருக்கும் தடைகளை நீக்கும்வரை தனது முடிவை மாற்றிக்கொள்ளமுடியாது என்பது புத்தினின் பதிலாக இருந்தது.
போர் ஆரம்பித்த 100 வது நாளில் அந்தச் சந்திப்பு சோச்சி நகரில் நடைபெற்றது. உலகின் மற்றப் பகுதிகள் எவற்றையும்விட ஆபிரிக்க நாடுகளே போரால் உணவுப்பொருளுக்கான பெரும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. தமக்குத் தேவையான கோதுமையில் 40 % ஐ அவர்கள் உக்ரேன், ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள்.
போரின் விளைவால் தமது பிராந்தியத்தின் பலவீனத்தை ஆபிரிக்க நாடுகள் என்றுமில்லாத அளவுக்கு உணர்ந்திருக்கின்றன. தமக்குத் தேவையான உணவுத் தானியங்களை முடிந்தவரை தமது நாடுகளிலேயே பயிரிடுவது பற்றிப் பல ஆபிரிக்கத் தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
மூன்று மணித்தியாலங்கள் நடந்த சந்திப்பின் பின்னர் புத்தின் வறிய நாடுகளின் பலவீனமான நிலைமையை அறிந்திருப்பதாகத் தெரிவித்ததாக மக்கி சால் குறிப்பிட்டார். அதற்கான ஒரு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார். இதே நிலைமைபற்றி ஐ.நா-வின் பிரதிநிதிகளும் புத்தினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்