அமெரிக்கா நாடுகளின் மாநாட்டில் புலம்பெயர்பவர்கள் பற்றிய ஒப்பந்தம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த அமெரிக்காக் கண்டத்து நாடுகளிடையே முக்கிய விடயமாக நாடுகளிடையே புலம்பெயர முயல்பவர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலிருக்கும் நாடுகளிலிருந்து வடக்கு அமெரிக்காவை நோக்கிப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதே அதன் காரணமாகும்.
மனிதர்களைக் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல், நாடுகளிடையே பயணிப்பவர்களுக்கான சட்டபூர்வமான வழிகளை உண்டாக்குதல், அகதிகளாகப் புலம்பெயரத் தேவையான காரணங்கள் இல்லையென்று தெரியவந்தால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும், குறிப்பிட்ட நாடு அந்த நபரை ஏற்றுக்கொள்ளவும் செய்தல் ஆகியவை ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
மத்திய அமெரிக்காவிலும், மெக்ஸிகோவிலிருந்தும் மட்டுமே கடந்த வருடம் அமெரிக்காவுக்குள் நுழைய ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தெற்கு எல்லைகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் பலர் ஹைட்டி, வெனிசுவேலா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா மட்டுமன்றி மெக்ஸிகோ, கொலம்பியா, எல் சல்வடோர், ஈகுவடோர் ஆகிய நாடுகளும் புலம்பெயர வந்தவர்கள் பலரை ஏற்றுக்கொண்டன. ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் மேற்கண்ட நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் சமயத்தில் நாட்டுக்குள் வாழ அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா தனது நாட்டில் விவசாயத் துறையிலிருக்கும் வேலைவாய்ப்புக்களுக்கு முன்னிலும் அதிகமானோரை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்