உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம்.
லண்டனின் விமான நிலையமொன்றில் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுத் தயாராக இருந்தது உள்துறை அமைச்சால் வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம். விமானிகளும் உதவியாளர்களும் மட்டுமன்று ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு சில அகதிகளும் உள்ளே ஏறியிருந்தார்கள். இரவு 10.30 க்குப் பறக்கவிருந்தது அந்த விமானம். ஆனால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் நிறுத்த வேண்டியதாயிற்று.
ஐரோப்பிய அகதிகள் அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த ஐக்கிய ராச்சியத்தின் ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம். ஐ.நா- உட்பட்ட பல அமைப்புக்களும், மனித உரிமைக் குழுக்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் பலரும், தனித்தனியாக அகதிகளும் அந்தப் பயணத்தை நிறுத்தும்படி வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குப் போட்டிருந்தார்கள். ஐக்கிய ராச்சிய நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அப்பயணத்தை ஐரோப்பிய நீதிமன்றம் கடைசி நிமிடத்தில் நிறுத்தியது.
அனுப்பப்படவிருந்த அகதிகளில் ஒருவருடைய பயணம் அந்த நபரின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று ஐக்கிய ராச்சிய நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு முடியவில்லை என்பதாலேயே ஐரோப்பிய நீதிமன்றம் அப்பயணத்தை நிறுத்தியிருப்பதாகக் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
“இத்திட்டம் பற்றிய கடுமையான எதிர்ப்புகள் நாம் எதிர்பார்த்ததே. எங்களைப் பொறுத்தவரை இது மிகவும் கவனமாக யோசித்துத் தயாரிக்கப்பட்ட திட்டம். இது வெற்றியடையும் என்பதே எங்கள் முடிவு. எனவே, இத்திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தியே தீருவோம்,” என்று உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்