தாடிக்கொம்பு கோவில் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?|ஆன்மிகநடை
தாடிக்கொம்பு கோவில் வரலாறு
முன்னுரை :
உலகில் பல கோவில்கள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள தாடிக்கொம்பு கோவில் வரலாறு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அறிமுகம் :
சௌந்தரராஜ பெருமாள் கோயில் என்பது, திண்டுக்கல் மாவட்டத்தில், தாடிக்கொம்பு என்னும் ஊரில் அமைந்துள்ளது.இக்கோவில் விஜயநகர பேரரசர்களான அச்சுதேவராயர்,ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது.கோவிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது.நான்கு பக்கங்களிலும் உயர்ந்த உறுதியான மதில்கள் நடுவில் கோவில் பிரகாரமும் ஐந்து சந்நிதிகளும் உள்ளன.
சௌந்தர் ராஜ பெருமாள்,ஶ்ரீ தேவி, பூதேவி ,சமேதகராக காட்சி அளிக்கிறார். சந்நிதியின் தென் புறத்தில் சௌந்தரவள்ளி தாயார் சந்நிதி உள்ளது.ஆழ்வார்களின் செப்பு திருவுருவங்களும் திருமாலின் தசாவதாரத்தினை விளக்கும் சிற்பங்களும் அமைந்துள்ளன.
அம்மன் சந்நிதியை அடுத்து கனகசபை மண்டபமும் அற்புத சிற்பங்கள்அடங்கியுள்ள கலைக்கூடமாக திகழ்கிறது.மதுரை,சுசீந்திரம் , கிருஷ்ணாபுரம், தென்காசி போன்ற கோவில்களில் உள்ளது போலவே சப்த ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இம்மண்டபத்தில் உள்ளன.
இக்கோவிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர்,சரஸ்வதி அடுத்தடுத்து காட்சி அளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்கு தேனாபிஷேகத்துடன் விஷேச பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம் , ஞாபக மறதி, பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் ஹயக்ரீவருக்கு தேங்காய்,நாட்டுச்சக்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
தன்வந்திரிக்கும் தனி சந்நிதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம் ,மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடைபெறுகிறது.இங்கு உள்ள சக்கரத்தாழ்வார் விஷேசமாவார்.இவரைச் சுற்றிலும் காயத்திரி மந்திர தேவதைகள் உள்ளனர்.இவருக்கு பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். விஷ்வக்சேனர் , இரட்டை விநாயகர் , பெருமாளின் தசாவதாரம் , லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர் , சொர்ண பைரவர்,ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சந்நிதி உண்டு.
நடைத்திறப்பு :
• காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
• மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 வரை
பிரார்த்தனைகள் :
இங்குள்ள கார்த்தவீர்யார்ஜுணன் சந்நிதியில் எலுமிச்சை மாலை மற்றும் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். வியாழன் கிழமை தோறும் இங்கு உள்ள ஆண்டாளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணம் கை கூடும்.குழந்தை வரம் , வணிக வளர்ச்சி , வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும்.
திருவிழாக்கள் :
சித்திரை மாதப் பௌ்ணமி அன்று சௌந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி பக்த்தர்களுக்கு அருள் பாலிப்பார்.ஆடி மாதம் ஆடிப்பூரம் நாளன்று பெருமாள் ஆண்டாளுக்கு திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது . தாயார் சந்நிதியில் கொலு விழா நடைபெறும். மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான நாளாகும் . சொர்க்க வாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
முடிவுரை :
கோவிலின் தல வரலாறு , அமைவிடம் , நடை திறப்பு , பிரார்த்தனை , சிறப்பு , அனைத்தையும் இக்கட்டுரையில் கண்டோம்.இன்னொரு பதிவில் இன்னோர் ஆலய சிறப்பைப்பற்றி பார்ப்போமா? வெற்றிநடை ஆன்மிகநடை பதிவுகளுடன் இணைந்திருங்கள்.
எழுதுவது :
திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பண்டுதகாரன் புதூர், மண்மங்கலம் , கரூர் – 6.