இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.
ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண் டர் லேயொன் விஜயம் செய்தார்.
இஸ்ராயேலில் செவ்வாயன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த அவர், “தன்னிடம் எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா அதைப் பணயம் வைத்து நினைத்ததைச் சாதிக்க முயல்கிறது,” என்று குற்றஞ்சாட்ட்டினார். 2020 இல் செய்துகொள்ளப்பட்ட 15 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தின்படி இஸ்ராயேல் கடலுக்குக் கீழிருந்து எடுக்கும் எரிவாயுவை எகிப்தில் திரவ எரிவாயுவாக மாற்றி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இஸ்ராயேலிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவின் அளவை மேலும் அதிகரிக்கவே ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எகிப்தில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டு அங்கிருக்கும் திரவ எரிவாயு தயாரிப்பு மையத்தை விஸ்தரிக்கவேண்டும்.
உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும். – வெற்றிநடை (vetrinadai.com)
எகிப்தைப் பொறுத்தவரை அது உணவுத்தானியங்களை ரஷ்யாவிலிருந்தும் உக்ரேனிலிருந்தும் இறக்குமதி செய்துவந்த நாடு. நாட்டின் வறிய மக்களுக்கு அத்தானியங்களைக் குறைந்த விலையில் கொடுத்து வந்ததால் அவைகளின் விலையுயர்வாலும், தட்டுப்பாட்டாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 80 % உணவுத்தானியங்கள் அவ்விரண்டு நாடுகளிலிருந்தே பெறப்பட்டு வந்ததால் அவைகளுக்காக வேறு கொள்வனவு நாடுகளை நாடவேண்டியிருக்கிறது.
புதனன்று கெய்ரோவில் எகிப்த்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி உடனடியாகச் சுமார் 100 மில்லியன் எவ்ரோக்களை அந்த நாட்டின் அவசர உணவுத் தேவைக்காக உதவுவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதிகொடுத்திருக்கிறது. அத்துடன், தொடர்ந்தும் எகிப்தில் விவசாய உற்பத்திக்காகவும் உதவ வொன் டர் லேயொன் உறுதி கூறியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்