சூரியனாய் நீயிருக்க…
நண்பனே…
நீ
புழுவோ பூச்சியோ
அல்ல…
அவதாரம்!
நீதான் இங்கே
உன்னை
வடிவமைக்கிறாய்…
ஞானியாகவோ!
போகியாகவோ!
தேடல்களிலேயே
தொலைந்து கொண்டிருக்கிறது
உன்னுடைய பொழுதுகள்!
எதையும்
நீ
கொண்டு வரவுமில்லை!
கொண்டு
செல்லப்போவதுமில்லை!
இறக்கும் வரையில்தான்
எல்லாம்…
தெரிந்தும் தெரியாதவராகவே
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
சூரியனாய்
நீயிருக்க
வேறு வெளிச்சம்
உனக்கெதற்கு?
அன்று…
காட்டில் வாழ்ந்தவன்
கண்ட
நிம்மதியை
இன்று
நாட்டை ஆள்பவரும்
காணவில்லை!
புத்தனும்
சித்தனும்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்க…
உச்சத்தில்
புரண்டவர்கள்
அடையாளம் இல்லாமலேயே
போயுள்ளனர்!
அதிகார சிம்மாசனங்களை
அலங்கரித்தவர்கள்
முகவரி இல்லாமலேயே
தொலைந்துள்ளனர்!
உன்னை
சாமானியனாக
என்றும் நினைக்காதே…
சாதிக்க வந்தவன் நீ!
ஆறு அறிவிற்குமேல்
அடுத்ததாய் ஏதுமில்லை…
உனக்கும் உண்டு
ஆறறிவு!
பயன்பாடற்ற எதுவும்
பாழ்பட்டு விடும்!
உன் அறிவைப் பயன்படுத்து!
செயல்படுத்து!
உன்
சுயமே
உன் சிம்மாசனம் ஆகட்டும்!
இங்கே…
எவர்க்கும்
முகமும் அகமும்
ஒன்றாய் இருப்பதில்லை!
போலிகள் பிரகாசிப்பதுபோல்
நிஜங்கள்
ஒளிர்வதில்லை!
முற்போக்கு முகமூடிகள்
பிற்போக்குகளுக்கே
முதன்மையாகிறது!
சொல்வேறு
செயல் வேறாய்
வேடம் கட்டுவோரே
இங்கே
புரட்சியாளராய்!
உன்
பிறப்பு என்பது
செல்லரித்த தாளாய்
மாறுவதற்கல்ல…
புரையோடிப்போன
பொய்மைகளை
சீர்திருத்தம் செய்வதற்கு!
நீ
பத்தோடு பதினொன்றல்ல…
கோடியில் ஒருவன்!
உனக்கு
நீ மட்டுமே
எஜமானன்!
பல்லக்கை சுமக்கவும்
நீ பிறக்கவில்லை!
பல்லக்கில்
பவனி வரவும்
தோன்றவில்லை நீ!
மேடு பள்ளங்களை
சமமாக்க வந்தவன் நீ!
அரிதார பூச்சுகளை
அழித்திட வந்தவன் நீ!
உன் வாழ்க்கை
என்பது
உன்னுடையது…
அதை நீயே உருவாக்கு!
உன்
முகத்தையும்
முகவரியையும்
உலகின் அதிசயமாக்கு!
உலகை
உருவாக்கிடும்
நவீன சிற்பி நீ!
நீ வாழ
எது தேவையோ
அது மட்டுமே
உனக்கு போதும்!
தேடித்தேடி
சேர்ப்பதெல்லாம்
உன்னோடு வரப்போவதில்லை!
உன்னை
நீ நம்பியதுபோல்
உன் வாரிசுகளையும் நம்பு!
அவர்களுக்குரியதை
அவர்கள் அடைவார்கள்!
சுயநலச் சிறையை விட்டு
வெளியில் வா!
வென்றவர்களின்
வரலாற்றை
அறிந்துகொள்!
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்
வாழ்ந்து கொண்டிருப்போரை
தெரிந்து கொள்!
அவர்களின் இடத்தையே
உன்னுடைய லட்சியமாக்கு!
எழுதுவது : கவிஞர் பாரதிசுகுமாரன்,